திருப்பத்தூர் அருகே குடிநீர் பாட்டிலில் செத்து கிடந்த பல்லி

*பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே பெட்டிக்கடையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்து கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் ரியாஸ்(26). இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் ஆண்டியப்பனூர் அணையை சுற்றி பார்க்க சென்றார். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை வாங்கினார். பின்னர், பாட்டில் மூடியை திறக்க முயன்றபோது உள்ளே ஏதோ இருப்பதை கவனித்தார். கூர்ந்து கவனித்தபோது குடிநீர் பாட்டிலுக்குள் பல்லி செத்து கிடப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரியாஸ், கடைக்காரரிடம் குடிநீர் பாட்டிலை காண்பித்து கேட்டுள்ளார். அதற்கு, அந்த கடைக்காரர் தனக்கு எதுவும் தெரியாது. நான் படிப்பறிவில்லாதவன். புதிதாக வந்த பெட்டியில் இருந்து தான் குடிநீர் பாட்டிலை எடுத்து கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.

திருப்பத்தூரில் இயங்கி வரும் பிரபல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலையில் இருந்து சப்ளை செய்யப்பட்ட இந்த குடிநீர் பாட்டிலில் பல்லி செத்து கிடந்தது பார்த்து அங்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்பதால் பணம் கொடுத்து வாங்கி குடிக்கிறோம். ஆனால், குடிநீருடன் பாட்டிலுக்குள்ளேயே பல்லி செத்து கிடக்கிறது. இதுதெரியாமால் அந்த குடிநீரை குடித்து இருந்தால் ஆபத்து ஏற்பட்டு இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்பத்தூர் அருகே குடிநீர் பாட்டிலில் செத்து கிடந்த பல்லி appeared first on Dinakaran.

Related Stories: