தமிழ்நாடு முழுவதும் ரகத்திற்கு ஏற்ப அரிசி விலை கிலோ ரூ.10 வரை உயர்வு.. அரிசி மூட்டை சுமார் ரூ. 300 விலையேற்றம்!!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ரகத்திற்கு ஏற்ப அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விண்ணை முட்டிக் கொண்டு இருக்கும் சூழலில் சமையல் எரிவாயு விலை உயர்வும் பொது மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பட்ஜெட் போட்டு வாழ்ந்து வரும் நடுத்தர குடும்பங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் கூடுதல் சுமையாக திடீரென அரிசி விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வெளிநாடுகளுக்கு நெல் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு நெல் வரத்து குறைந்துள்ளதாக கூறும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கம், அரிசி விலை கிலோவிற்கு ரூ.2 முதல் ரூ. 10 வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் நெல் கணிசமான அளவு பொது விநியோகத் திட்டத்திற்காகவே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு வந்து கொண்டு இருந்த அரிசி திடீரென குறைந்துள்ளதால் தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவிற்கு ரூ. 6 அதிகரித்துள்ளது. கர்நாடகா பொன்னி அரிசி ரூ.44ல் இருந்து ரூ. 50 ஆகவும் கடந்த நவம்பரில் அறுவடை செய்யப்பட்ட பழைய அரிசி ரூ. 50ல் இருந்து ரூ. 56 ஆகவும் உயர்ந்துள்ளது. வரும் டிசம்பர் வரை அரிசி விலையேற்றம் தொடரும் என்று வணிகர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னையிலும் பிராண்டுகள் வாரியாக அரிசி மூடைகளின் விலை அதிகரித்துள்ளது. பொன்னி, பாசுமதி, பச்சரிசி உள்ளிட்ட அனைத்து ரகங்களும் விலை உயர்ந்துள்ளதால் ஒரு மூடைக்கு ரூ. 300 விலையேற்றம் காணப்படுவதாக வணிகர்கள் கூறுகின்றனர்.

The post தமிழ்நாடு முழுவதும் ரகத்திற்கு ஏற்ப அரிசி விலை கிலோ ரூ.10 வரை உயர்வு.. அரிசி மூட்டை சுமார் ரூ. 300 விலையேற்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: