அதானியின் தொழில் வளர்ச்சிக்காக மோடி அரசு என்னென்ன செய்தது என்ற பட்டியலை வெளியிட்டது அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு!!

வாஷிங்டன் : இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான அதானியின் தொழில் வளர்ச்சிக்காக மோடி அரசு என்னென்ன செய்தது என்ற பட்டியலை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு குறிப்பிட்டு புகார் கூறியிருப்பது புயலை கிளப்பியுள்ளது. சத்தீஸ்கரில் ஹஸ்தேவ் வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அதானிக்கு மோடி அரசு உதவியதாக வாஷிங்டன் போஸ்ட் சாடி உள்ளது. ஹஸ்தேவ் வனப்பகுதியில் 500 கோடி டன் நிலக்கரி வளம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதற்காக நிலக்கரி சுரங்கம் அமைக்க 1,880 ஏக்கர் நிலத்தை மோடி அரசிடம் இருந்து அதானி குழுமம் பெற்றதாக அந்த நாளேடில் கூறியுள்ளது ஹஸ்தேவ் வனத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்றும் ஏராளமான விலங்குகள் வாழ்விடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

சுரங்கத்தை எதிர்த்ததால் அரசு அமைப்புகளால் லைஃப் தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டது என்பது மற்றொரு புகாராகும் ஹஸ்தேவ் வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கும் நிலக்கரி மாசு ஏற்படுவதற்கும் பல தன்னார்வ நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறியுள்ள நாளேடு, அந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மோடி அரசு வருமான வரி சோதனை நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தது. அத்துடன் குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வருவதையும் மோடி அரசு தடுத்ததாக வாஷிங்டன் போஸ்ட் குற்றம் சாட்டி உள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியா, கொள்கை ஆராய்ச்சி மையம், என்விரோனிக்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றிற்கு வந்த நிதி, மோடி அரசால் தடுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் போனது என்றும் சுரங்க திட்டத்தை எதிர்த்த சுற்றுசூழல் செயற்பாட்டாளர் அலோக் சுக்லாவின் செல்போன் பெகாஸஸ் மென்பொருள் மூலம் ஓட்டுக் கேட்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதானி பவர் நிறுவனம் ஜார்கண்ட்டில் அனல்மின் நிலையம் அமைக்க மோடி அரசு அனுமதி தந்தது என்று மற்றொரு புகாரை அமெரிக்கா நாளேடு கூறியுள்ளது. மின் உற்பத்தி ஆலைக்காக ஏழை மக்களின் தென்னந்தோப்பு, வயல்வெளிகள், புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டன என்றும் 10 கிராமங்களை சேர்ந்த மக்களை பலவந்தமாக வெளியேற்றி 1,214 ஏக்கர் நிலத்தை அதானி குழுமம் அபகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

கொட்டா மின் நிலையத்தை எதிர்த்த தொண்டு நிறுவனங்களும் மோடி அரசால் வருமான வரி சோதனைக்கு ஆளானதோடு திட்டத்தை எதிர்த்த தன்னார்வலர் ஸ்ரீதர் அரசு இயந்திரங்களால் மிரட்டப்பட்டார் என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது. சுற்றுசூழல் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பையும் மீறி ஆலையை அதானி நிறுவனம் தொடங்கியது என்பது வாஷிங்டன் போஸ்ட் நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

The post அதானியின் தொழில் வளர்ச்சிக்காக மோடி அரசு என்னென்ன செய்தது என்ற பட்டியலை வெளியிட்டது அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு!! appeared first on Dinakaran.

Related Stories: