25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

சென்னை : 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “மின்னணு சாதனங்கள் பொருத்துதல், மின்னணு எடை , வடிகால் மறு சீரமைப்பு , கூரைப்பழுது பார்த்தல் , நடைபாதை அமைத்தல் மற்றும் சீரமைத்தல் , சுவர்களில் வண்ணம் பூசுதல் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்திட உழவர் சந்தைகளில் ரூபாய் 8.75 கோடி மதிப்பீட்டில் புரனமைக்கும் பணிகளுக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், சூலூர், செங்கல்பட்டு ,பெரியார் நகர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ,திருமங்கலம், உசிலம்பட்டி ,ஆனையூர், குமாரபாளையம், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, அஸ்தம்பட்டி, எடப்பாடி, இளம்பிள்ளை ,தம்பட்டி ,ஜலகண்டபுரம், தாராபுரம், பல்லடம், நாட்றம்பள்ளி, திருவண்ணாமலை , செங்கம், துறையூர், காகிதப்பட்டறை ஆகிய மொத்தம் 25 உழவர் சந்தைகளில் புரனமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் மேலும் தனது கருத்துருவில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ,நாமக்கல், புதுக்கோட்டை ,திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகள் புரனமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பாட்டில் உள்ள மூன்று உழவர் சந்தைகளும் ஏற்கனவே புரனமைக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பதிலாக செங்கல்பட்டு உழவர் சந்தை இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!! appeared first on Dinakaran.

Related Stories: