கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஓடும் ரயிலில் தீ வைக்க முயற்சி: மகாராஷ்டிரா வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் நேற்று மீண்டும் தீ வைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கோழிக்கோடு அருகே ஆலப்புழா- கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த இரு மாதங்களுக்கு முன் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது உயிருக்கு பயந்து கீழே குதித்ததில் 3 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஷாரூக் செய்பி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவருக்கு தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த வழக்கை என்ஐஏவும் விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் கடந்த வாரம் கண்ணூர் ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைத்த சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த பிரசோன்ஜித் சிக்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஒரு சம்பவமாக நேற்று கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் தீ வைக்க முயற்சி நடந்துள்ளது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் கண்ணூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதில் பயணம் செய்த ஒரு வாலிபர் ரயிலில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை கிழித்து தீ வைக்க முயற்சித்தார். உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஓடும் ரயிலில் தீ வைக்க முயற்சி: மகாராஷ்டிரா வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: