தமிழ்நாடு முழுவதும் 10 பேஸ்புக் தோழிகளை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர்: திருப்பூர் பெண் கொடுத்த புகாரில் கைது

திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும் 10 பேஸ்புக் தோழிகளை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர் திருப்பூர் பெண் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் காலேஜ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் வாலிபர் ஒருவர் தனது 26 வயது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என்றும், செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான இளம்பெண்ணின் செல்போன் எண் சிக்னலை ஆய்வு செய்தனர். அது நாகர்கோவிலில் உள்ள ஒரு இடத்தை காட்டியது. இதனையடுத்து போலீசார் நாகர்கோவில் விரைந்தனர். அங்கு அவரை தேடியபோது ஒரு வாலிபருடன் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தை, இளம்பெண் மற்றும் வாலிபரை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இளம்பெண்ணுடன் பேஸ்புக்கில் நாகர்கோவில் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்த ராம் (எ) ராமச்சந்திரன் (36) என்பவர் அறிமுகமானார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். ராம் இனிக்க இனிக்க பேசியதில் அந்த இளம்பெண் மயங்கியுள்ளார். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.

நான் ஒரு அனாதை, வறுமையில் இருப்பதாக கூறிய ராம் அந்த இளம்பெண்ணை நம்ப வைத்தார். இதனால் அவருக்கு பண உதவிகளை செய்து வந்தார். மிக நெருக்கமான பின்னர் இளம்பெண்ணை காதலிப்பதாகவும், சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார். முதலில் மறுத்த இளம்பெண் ‘‘என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையென்றால் நமது பழக்கத்தை உனது கணவரிடம் கூறி விடுவேன். அவமானம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்வார். இல்லையென்றால் நான் கொலை செய்து விடுவேன்’’ என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன இளம்பெண் குழந்தையுடன் நாகர்கோவிலுக்கு சென்று வாலிபருடன் சேர்ந்துள்ளார். அவருடன் உல்லாசமாக இருந்த ராம் தனது பெயரை பச்சை குத்திவிட்டுள்ளார். பதிலுக்கு இளம்பெண் பெயரை தானும் பச்சை குத்திக்கொண்டார். அவர் கொண்டு வந்த நகை, பணம் உள்ளிட்டவைகளை பறித்து கொண்டு மது குடிக்க பழகிக் கொடுத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். பணம் தீர்ந்ததும் நகையை விற்று ஜாலியாக செலவு செய்துள்ளார். இளம்பெண்ணை குழந்தையுடன் வீட்டில் சிறை வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராம் என்ற ராமச்சந்திரனை கைது செய்தனர். அவர் இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பேஸ்புக்கில் பழகி அவர்களின் பலவீனங்களை அறிந்து மிரடடி உல்லாசம் அனுபவித்து நகை, பணத்தை அபேஸ் செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த ராதாபுரத்தில் இளம்பெண்ணை ஏமாற்றியதாக ஏற்கனவே சிறை சென்று திரும்பியுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான்.

கருத்து வேறுபாட்டால் மனைவி, குழந்தையுடன் அவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் பேஸ்புக்கில் அழகான பெண்களை குறி வைத்து தொடர்பு கொண்டு இந்த துணிகர செயலை அரங்கேற்றியுள்ளார். ஒரு பெண்ணை ஏமாற்றியதும் தான் குத்திய பச்சையை அழித்துவிட்டு மற்றொரு பெண்ணுக்கு வலைவீசி வந்துள்ளார். அந்த பெண் கிடைத்ததும் அவர் பெயரை பச்சை குத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். பேஸ்புக் தோழிகளுடன் உல்லாசம் அனுபவிக்க வீடு வாடகைக்கு எடுத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 10 பேஸ்புக் தோழிகளை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர்: திருப்பூர் பெண் கொடுத்த புகாரில் கைது appeared first on Dinakaran.

Related Stories: