உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்திய வீரர்கள் உற்சாகம்

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள, இந்திய அணி வீரர்கள் முழுவீச்சில் தயாராகி உற்சாகமாக உள்ளனர். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் முழுவீச்சில் தயாராகி உள்ளனர். புதிய சீருடையுடன் களமிறங்க உள்ள இந்திய அணி வீரர்கள், ‘ஃபோட்டோ ஷூட்’ நிகழ்ச்சியில் நேற்று உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.

இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் பைனலில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 2002ல் இருந்து, ஒவ்வொரு சீசன் முடிவிலும் டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையை பரிசளித்து வந்த ஐசிசி, 2019ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்தது. இதில் 9 அணிகள் 2 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் 2021 பைனலில் மோதின. சவுத்தாம்ப்டனில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடியது.

அடுத்து 2021-23 சீசன்களில் நடந்த போட்டிகளின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் பைனலில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

* இறுதிப் போட்டியில் ‘டியூக்ஸ்’ பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. இங்கிலாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீசில் இந்த வகை பந்துகளே அதிகம் உபயோகிக்கப்படுகிறது.
* இறுதிப் போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது ‘டை’ ஆனாலோ (சரிசமன்) இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொள்ளும்.
* இந்த போட்டிக்கு ஒரு ‘சிசர்வ்’ தினம் வழங்கப்பட்டுள்ளது. 2019-21 பைனலின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், 6வது நாளில் ஆட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
* ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகிய நிலையில், இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் பும்ரா, பன்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஆகியோர் காயத்தால் பைனலில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்திய வீரர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: