பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் மாயா: ஜெபர் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, பிரேசில் வீராங்கனை ஹதாஜ் மாயா தகுதி பெற்றார். 4வது சுற்றில் ஸ்பெயினின் சோரிபெஸ் டார்மோவுடன் (26 வயது, 132வது ரேங்க்) நேற்று மோதிய பீத்ரிஸ் ஹதாஜ் மாயா (27 வயது, 14வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 6-7 (3-7) என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். பின்னர் சுதாரித்துகொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 6-3, 7-5 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 51 நிமிடத்துக்கு நீடித்தது. 1968க்கு பிறகு பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறிய முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமை ஹதாஜ் மாயாவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, பிரேசிலின் மரியா பியூனோ இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் (28 வயது, 7வது ரேங்க்) 6-3, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெர்னார்டா பெராவை (28 வயது, 36வது ரேங்க்) எளிதில் வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 3 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் (27 வயது, 35வது ரேங்க்) மோதிய நார்வே நட்சத்திரம் கேஸ்பர் ரூட் (24 வயது, 4வது ரேங்க்) 7-6 (7-3), 7-5, 7-5 என்ற நேர் செட்களில் 3 மணி, 20 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் மாயா: ஜெபர் முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: