கடும் வெயில் நீடிப்பதால் மீண்டும் தள்ளிவைப்பு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறப்பு: 1 முதல் 5ம் வகுப்புகள் ஜூன் 14ல் தொடங்கும்

சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார். 1 முதல் 5ம் வகுப்புகள் ஜூன் 14ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கத்திரி முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். எனவே, இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலாளர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளி போட முடிவு செய்தார்.

அதன்படி, வரும் 7ம்தேதி பள்ளிகளை திறப்பது குறித்து ஜப்பான் நாட்டுக்கு அரசு முறை பயணம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அவர் அனுமதி கொடுத்த நிலையில் ஜூன் 7ம்தேதி (நாளை) பள்ளிகள் திறப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளிகள் வரும் 7ம்தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் முன் கோடை வெயில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, வெயில் இப்போது தான் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தினசரி வெயில் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. தொடர்ந்து சில நாட்களாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 105 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையாததால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெயிலின் தாக்கத்தை மாணவர்கள் தாங்குவார்களா என்று சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

மேலும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இந்த சூழலில் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பள்ளி திறப்பை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை அரசுக்கும், அமைச்சருக்கும் பதிவு செய்து வந்தனர். எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி கடந்த 2 நாட்களாக எழுந்தது. இது தொடர்பாக பள்ளி கல்வி துறை செயலாளர்களுடன் ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை (7ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று முன்தினம் மட்டும் 18 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி இருந்தது. தென்மேற்கு பருவ மழை தொடங்க இருக்கும் நிலையிலும் தமிழகத்தில் வெயில் இன்னும் குறைந்தபாடில்லை. எனவே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்த நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் கோடை வெயில் பாதிப்பு குறித்து எடுத்து கூறினார். இதனால் பள்ளிகள் திறப்பை வரும் 12ம்தேதி திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கலாம் என்றும் கூறியதாக தெரிகிறது. அப்போது கல்வி துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். இந்த ஆலோசனையின்போது, வெயில் தாக்கம் தமிழகத்தில் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியை மீண்டும் சில நாட்கள் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு 7ம்தேதியில் இருந்து 12ம்தேதிக்கு (திங்கள்) தள்ளி போகிறது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பதிவில் நேற்று கூறி இருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் மீண்டும் வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கடும் வெயில் நீடிப்பதால் மீண்டும் தள்ளிவைப்பு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறப்பு: 1 முதல் 5ம் வகுப்புகள் ஜூன் 14ல் தொடங்கும் appeared first on Dinakaran.

Related Stories: