டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வின் ‘ஆன்சர் கீ’ வெளியிடப்பட்டுள்ளது. நாளை இரவுக்குள் ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. 2023-24ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 7ம் தேதி 499 நகரங்களில் 4,097 மையங்களில் நடைபெற்றது.
தேசிய அளவில், 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான ‘ஆன்சர் கீ’ எனப்படும் விடைக்குறிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்பதில் இருந்து, தங்களது ஓஎம்ஆர் விடைத்தாள் மற்றும் பதில்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்களில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், நாளை (ஜூன் 6) இரவு 11.50 மணிக்குள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக தேர்வர்கள் ₹ 200 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான வழிகாட்டல் நெறிமுறைகள் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
The post இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு ‘ஆன்சர் கீ’ வெளியீடு: மறுமதிப்பீடுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.