ராட்டினங்கிணறு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தம் விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: ராட்டினங்கிணறு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க, இப்பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நோக்கி நாள்தோறும் புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, நாகர்கோவில் திருநெல்வேலி என பல்வேறு தென்மாவட்டங்களுக்கு ஏராளமான விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. மேலும், செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு அருகே கூட்ஸ் ரயில்களில் இருந்து நெல்மூட்டைகள் உள்பட பல்வேறு பொருட்களை ஏற்றி இறக்கும் குடோனும் இயங்கி வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை சுற்றிலும் வல்லம், ஆலப்பாக்கம், ராமகிருஷ்ணா நகர், அட்சயா நகர், சக்தி நகர், அம்மணம்பாக்கம் உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இப்பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்கள், அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தை கடந்து சென்றால், சுமார் 2 கிமீ தூரம் சுற்றி ஊருக்கு செல்லவேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் அங்குள்ள ரயில் தண்டவாளத்தை அபாயகரமான முறையில் கடந்து செல்கின்றனர். இதில் பலர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில்களில் அடிபட்டு பலியாகி வருகின்றனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள மேற்கண்ட பகுதிகளுக்கு வாகனங்களில் சென்றுவர, ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் புதிதாக ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவங்கி, தற்போது 50 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் சில சமயங்களில் கிடப்பில் போடப்பட்டும், மந்த கதியிலும் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் ரயில் தண்டவாளங்களை அபாய நிலையில் கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ராட்டினங்கிணறு பகுதியில் ரயில் நிலையத்தை ஒட்டி மந்தகதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர தமிழக முதல்வர், ஒன்றிய அமைச்சர், எம்பி மற்றும் சம்பந்தப்பட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ராட்டினங்கிணறு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி மந்தம் விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: