லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நாளை மறுநாள் தொடக்கம்: இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் பைனல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதில் 2வது பைனல் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கி 11ம்தேதி வரை நடக்கிறது. இதில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, 2வது இடத்தில் உள்ள இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த முறை இறுதிபோட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை பட்டம் வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறது.. ஐபிஎல்லில் அசத்திய சுப்மன் கில் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ரோகித் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக களம் இறங்குகிறார். புஜரா, விராட் கோஹ்லி, ரகானே ,ஜடேஜா ஆகியோர் பேட்டிங் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். ரிஷப்பன்ட் இல்லாத நிலையில் விக்கெட் கீப்பருக்கு பரத்-இஷான்கிஷன் இடையே போட்டி உள்ளது. இருப்பினும் பரத்திற்கு தான் வாய்ப்பு கிடைக்கும். பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜை தான் பெரிதும் நம்பி உள்ளது. 3வது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு ஷர்துல் தாகூர், உமேஷ்யாதவ், ஜெய்தேவ் உனட்கட் இடையே போட்டி இருந்தாலும் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

அஸ்வினும் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என தெரிகிறது. அண்மையில் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றிய உத்வேகத்துடன் களம் காண்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலியா பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்க காத்திருக்கிறது. கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் என மிரட்டும் பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கலாம். இவர்களுடன் ஸ்காட் போலண்ட் டும் மிரட்ட காத்திருக்கிறார். சுழலில் நாதன் லயன் நெருக்கடி அளிப்பார். இரு அணிகளும் பட்டம் வெல்ல மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படிதினமும் மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கி நடக்கிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.பைனலுக்காக இரு அணி வீரர்களும் கடந்தசில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நாளை மறுநாள் தொடக்கம்: இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: