நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்: காதல் மனைவியை அடித்து கொன்ற சென்னை டிரைவர் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிக்காட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முரளி(எ)சுரேஷ் (32). டிரைவர். இவரது மனைவி மீனா(27). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுரேஷ் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இதனால் மனைவி மீனா மற்றும் குழந்தைகள் தாணிக்கோட்டகத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் மனைவி மீனாவின் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சுரேஷ், நேற்று முன்தினம் காலை சென்னையிலிருந்து வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பெத்தாச்சிக்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் மீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் சுரேஷ் தகராறு செய்துள்ளார். மீனா பதிலுக்கு வாக்குவாதம் செய்யவே, ஆத்திரமடைந்த சுரேஷ், வீட்டில் இருந்த தேங்காய் உரிக்க பயன்படுத்தும் இரும்புக்கம்பியை எடுத்து அவரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடத்தை சந்தேகத்தில் பயங்கரம்: காதல் மனைவியை அடித்து கொன்ற சென்னை டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: