* அரியலூர், கல்லங்குறிச்சியில் கலியுகவரதராஜராகப் பெருமாள் தரிசனம் தருகிறார். கருவறையில் 12 அடி உயர கம்பத்தை அனுமன் தாங்கிக் கொண்டிருக்கும் திருவுருவே உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பது கிடையாது.
* கடலூர், நல்லாத்தூரில் வரதராஜப் பெருமாள் திருவருள் புரிகிறார். இவருக்கு எதிரே உள்ள கருடாழ்வாரின் உடலில் எட்டு நாகங்கள் உள்ளன. சுவாதி நட்சத்திர தினத்தன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து 8 முறை வலம் வந்தால் கல்வி, செல்வம் விருத்தியாகும் என்பது ஐதீகம்.
* சிதம்பரம், எண்ணா நகரம் போஸ்ட், கீரப்பாளையம் வழியே உள்ள கண்ணங்குடியில் வரம் தரும் ராஜர் திருக்கோயில் கொண்டுள்ளார். வேண்டும் வரங்களைத் தருவதால் இவருக்கு இந்தப் பெயர். இத்தல அனுமன், கையில் ஜபமாலை ஏந்தியிருக்கிறார். ஹஸ்த நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலம் இது.
* சூளகிரியில், அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த ஆலயத்தில் எல்லாமே ஏழு மயம் – ஏழுமலை, ஏழுகோட்டை, ஏழு மகாதுவாரங்கள், ஏழடி உயர வரதராஜப் பெருமாள்!
* கோவை உக்கடத்தில் கரிவரதராஜப் பெருமாளாக திருமால் அருள்கிறார். இத்தலத்தில் உத்திராயணம், தட்சிணாயணம் என இரட்டை நுழை வாயில்கள் உள்ளது சிறப்பு. இத்தல ஹயக்ரீவர் கல்வி வரம் அருள்பவராக வணங்கப்படுகிறார்.
* கோவை கொழுமத்தில் கல்யாண வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். இத்தல தாயார், வேதவல்லிக்கு வில்வதளங்களாலேயே அர்ச்சனை நடைபெறுகிறது.
* சென்னை பூந்தமல்லியில் புஷ்பவல்லி தாயாருடன் வரதராஜரை கண்டு மகிழலாம். இவர் தலையின் பின்னே சூரியனுடன் உள்ளதால், இத்தலம் சூரியதோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மாசி விழாவின் போது திருக்கச்சி நம்பிகள், தேவராஜ அஷ்டகம் பாடி இத்தல பெருமாளை துதிக்கும் வைபவம் புகழ்பெற்றது.
* கல்யாண வரதராஜரை தரிசிக்க சென்னை காலடிப் பேட்டைக்குச் செல்லவேண்டும். தாமரை வடிவ பீடத்தில் நவகிரகங்கள் அருள்வதும், உற்சவர், பவளவண்ணர் கையில் தண்டம் ஏந்தி அருள்வதும், தனிச் சிறப்புகள்.
* சேலம், ஆறகழூரிலும் கரிவரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். இத்தல தாயார் கமலவல்லி 64 கலைகளும் சித்திரமாக தீட்டப்பட்ட அலங்கார மஞ்சத்தில் அமர்ந்து அருள்கிறார். இத்தல தசாவதார சுதைச் சிற்பங்களில் புத்தரும் இடம்பெற்றுள்ளார்.
* பாபநாசம், அய்யம்பேட்டை, பசுபதிகோயிலில் வைணவ ஆச்சாரியரான பெரிய நம்பிக்கு அவர் இழந்த பார்வையை மீட்டுத் தந்த வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். கேட்டை நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலம். மருதாணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி பிரார்த்தித்து கண்ணொளி பெறுவது இத்தல வழக்கம்.
* திருநெல்வேலி, அத்தாளநல்லூரில் யானையைக் காத்த கஜேந்திரவரதரைத் தரிசிக்கலாம். இந்தப் பெருமாளுக்கு சுத்தான்னம் நிவேதிக்கப்படுகிறது.
* நெல்லையில் உள்ளது வரதராஜப் பெருமாள் திருக்கோயில். கிருஷ்ணபரமராஜன் எனும் அரசனான தன் பக்தனை எதிரியிடமிருந்து காக்க அந்த அரசனைப்போலவே வேடம் தாங்கி போரிட்டு காத்த பெருமாள் இவர். நீலநிறக்கல்லினாலான மூர்த்தி.
* திருநெல்வேலி சங்காணியில் அருள்கிறார் சங்காணி வரதராஜப் பெருமாள். பெருமாளின் வலக்கரத்தின் தன ஆகர்ஷணரேகை உள்ளதால் பொன் பொருளை இவர் கரத்தில் வைத்து பக்தர்கள் நேர்ந்து கொள்கின்றனர்.
* திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அபீஷ்ட வரதராஜரை தரிசிக்கலாம். இத்தல விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்தால் ஒரு வருடத்திற்குள் அந்த பிரார்த்தனை நிறைவேறிவிடுகிறது.
* திருவண்ணாமலை, வந்தவாசி அருகே நல்லூரில் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். அவர் காலடியில், வணங்கியபடி காணப்படும் கருடாழ்வார், பக்தர்களின் கோரிக்கைகளை பெருமாளிடம் எடுத்துரைப்பதால், இவர் பரிந்துரைக்கும் கருடாழ்வார் எனப்படுகிறார்.
* தேனி, பெரியகுளத்தில். திருப்பதி பெருமாளைப் போன்றே காட்சியளிக்கிறார் வரதராகஜப் பெருமாள். கருவறையின் முன்னே தீபஸ்தம்பத்தின் அடியில் பிறந்த குழந்தைகளை வைத்து பழங்களை பெருமாளுக்கு நிவேதிக்க குழந்தையின் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை.
* விழுப்புரம், கச்சிராயப்பாளையத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயம் கொண்டருள்கிறார். யானைக் குகை எனும் ஒரு சுரங்கக் குன்று இங்கே உள்ளது. ராஜகோபுரம் இல்லாத ஆலயம் இது.
* காஞ்சிபுரம் வரதராஜர், தேவராஜர் என்றும் வணங்கப்படுகிறார். 40 வருடங்களுக்கு ஒருமுறை தரிசனமளிக்கும் அத்திவரதரும், தோஷங்கள் போக்கும் தங்க பல்லி, வெள்ளி பல்லியும் புகழ் பெற்றவை. வெள்ளையரான ராபர்ட் க்ளைவ் மற்றும் ப்ளேஸ் இருவரும் சமர்ப்பித்த நகைகள் திருவிழாகாலங்களில் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றன.
* திருத்தணி அருகே அருங்குளத்தில் கல்யாண வரதரை தரிசிக்கலாம். இங்கு பெருமாளுக்கு வில்வதளங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
* கோவை விக்னேஷ் நகரில் வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். உற்சவர், வடிவழகிய நம்பி. மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படும் வில்வமரம் இங்கு தலவிருட்சம். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது.
The post வரதராஜர் தரிசனம் appeared first on Dinakaran.