நீதி கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டோம்!: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை கைவிடவில்லை.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. சாக்ஷி மாலிக் மறுப்பு..!!

டெல்லி: நீதி கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டோம்; மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை கைவிடவில்லை என்று சாக்ஷி மாலிக் ட்வீட் செய்துள்ளார். பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரஜ் பூஷண் மீது உரிய நடவடிக்கை கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 2 மாதங்கள் போராடியும் பலன் அளிக்காததால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நாளில் அந்த கட்டிடம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசாரால் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பின்னர் ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் திரண்ட சாக்க்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோரிடம் விவசாய சங்கத்தினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பதக்கங்களை பெற்றனர். இதை தொடர்ந்து 2 கட்டங்களாக மகா பஞ்சாயத்து கூட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் ஜூன் 9ம் தேதிக்குள் பிரஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கெடு விதித்தனர். பின்னர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சாக்க்ஷி மாலிக் உள்ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் ஆகியோர் தங்கள் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர். மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்தில் இருந்து சாக்க்ஷி மாலிக் விலகுவதாகவும், மீண்டும் தன்னுடைய பணிக்கு திரும்புவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து சாக்ஷி மாலிக் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை கைவிடவில்லை. பணிக்கு திரும்பும் 3 பேரும் போராட்டத்தை கைவிடவில்லை. மல்யுத்த வீரர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார். நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்றும் மல்யுத்த வீராங்கனைகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். போராட்டத்தில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை ; தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் சாக்ஷி மாலிக் மறுத்திருக்கிறார். போராட்டத்துக்கு மத்தியில் ரயில்வேயில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்றும் சாக்சி மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.

 

The post நீதி கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டோம்!: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை கைவிடவில்லை.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. சாக்ஷி மாலிக் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: