சரக்கு ரயில் சேவை தொடங்க நிலையில், ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் சுமார் 60 மணி நேரத்திற்கு பிறகு பயணிகள் ரயில் குறைந்த வேகத்தில் இயக்கம்!!

பாலசோர் : ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் சுமார் 60 மணி நேரத்திற்கு பிறகு இன்று காலை பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஒடிசாவில் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் மாறி நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அந்த சமயத்தில் அருகே மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர் ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள் மோதியதில் அந்த ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்ததைத் தொடர்ந்து உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தண்டவாள சீரமைப்பு பணிகள் நேற்று போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. தடம் புரண்ட 21 பெட்டிகளும் பெரிய கிரேன்கள் மூலமாக விபத்து பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து புதிய தண்டவாள கற்கள் அமைக்கப்பட்டன.
சுமார் 1000 ஊழியர்கள் இரவு பகலாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதில், டவுன் லைன், அப் லைன் ஆகிய இரு முக்கிய வழித்தடங்களும் சரி செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த நிலையில் விபத்து நேரிட்டு 51 மணி நேரத்திற்கு பிறகு பஹானாகா ரயில் நிலையத்தில் இருந்து முதலில் டவுன்லைனில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. நிலக்கரி ஏற்றுக் கொண்டு விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த சரக்கு ரயில் ரூர்கேலா நோக்கிச் சென்றது. இதைத் தொடர்ந்து 12.15 மணிக்கு அப் லைனிலும் சரக்கு ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கையெடுத்து கும்பிட்டு வணங்கி ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்று காலை 7.30 மணி அளவில் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. பாலசோர் வழித்தடத்தில் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. எஞ்சிய 2 வழித்தடங்களில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post சரக்கு ரயில் சேவை தொடங்க நிலையில், ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் சுமார் 60 மணி நேரத்திற்கு பிறகு பயணிகள் ரயில் குறைந்த வேகத்தில் இயக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: