25 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்: நான்கு பேர் கைது

திருத்தணி: ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 25 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு இதற்கு காரணமான நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்திலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து சிலர், தமிழக எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர், 8 சப் – இன்ஸ்பெக்டர், 60 போலீசார் என நியமிக்கப்பட்டனர். இதில், கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட நல்லாட்டூர், சிவ்வாடா, நெமிலி, என்.என்.கண்டிகை, மிட்ட கண்டிகை, அருங்குளம், ஆந்திர மாநிலம் மங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் நேற்று சாராய தேடுதல் வேட்டை நடத்தினர். தமிழக எல்லையில் நடைபெற்ற இந்த சாராய தேடுதல் வேட்டையை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் நேரில் வந்து ஆய்வு செய்தார். இந்த சோதனையில், ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கிரிதரன்(25), அரக்கோணம் தாலுகா வேலூர்பேட்டையை சேர்ந்த அரி(28), சிவ்வாடா காலனியைச் சேர்ந்த வரதராஜ்(40), மிட்டகண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன்(38) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்களிடமிருந்து 25 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

 

The post 25 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்: நான்கு பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: