விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் நகர் பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இந்த கோடை வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் குளிர்ந்த சூழலுக்கு அப்பகுதிகள் மாறியது. இதனால் கடந்த சில நாட்களாக வெயிலில் தவித்த மக்களை இந்த மழை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உணரப்பட்டு பொது மக்களை வாட்டி வதைத்து வந்தது. வெயிலின் கொடுமையால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கிடந்தனர். பகல் முடிந்து மாலைப்பொழுது ஆகியும் பகலில் அடித்த வெயிலின் தாக்கத்தால் வெப்பம் தனியாத இரவையே பொதுமக்கள் கழித்தனர்.
இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் முழுவீச்சில் இருந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு பலத்த காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் தொடங்கிய மழை இரவு 8 மணியை கடந்தும் தொடர்ந்தது திடீரென கன மழையாகவும், சாரல் மழையாகவும் மாறி மாறி பெய்தது. இதனால் இலுப்பூர், சாங்கிராபட்டி, புங்கினிபட்டி, ஓலைமான்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரமாக இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் கோடை வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சமடைந்தனர். நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் மாலை வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் கன மழை பெய்ய துவங்கியது. புதுக்கோட்டை, கீரனூரை சுற்றி பலத்த மழை பெய்தது. உப்பிலியக்கிடி, தாயினிப்பட்டி ஆகிய கிராமங்களில் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தன. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post இலுப்பூர், கீரனூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை appeared first on Dinakaran.