பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றார். 4வது சுற்றில் பெரு வீரர் ஜுவன் பாப்லோ வரில்லாஸுடன் (27 வயது, 94வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (36 வயது, 3வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்களிலும் அதிரடியாக விளையாடி வரில்லாஸின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று தொடர்ந்து 14வது முறையாகவும், மொத்தத்தில் 17வது முறையாகவும் பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு முன்னேறி நடால் சாதனையை (16 முறை) முறியடித்தார். இப்போட்டி 1 மணி, 57 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று நடாலுடன் சமநிலையில் உள்ள ஜோகோவிச், காலிறுதியில் கரென் கச்சனோவ் சவாலை சந்திக்கிறார்.

முன்னதாக நடந்த மற்றொரு 4வது சுற்று போட்டியில் ரஷ்யாவின் கரென் கச்சனோவ் (27 வயது, 11வது ரேங்க்) இத்தாலியின் லாரன்ஸோ சொனேகோவுடன் (28 வயது, 48வது ரேங்க்) மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்து பின்தங்கிய கச்சனோவ், பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடி 1-6, 6-4, 7-6 (9-7), 6-1 என்ற செட் கணக்கில் 3 மணி, 29 நிமிடம் போராடி வென்றார்.
முச்சோவா முன்னேற்றம்: மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4வது சுற்று போட்டியில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா (26 வயது, 43வது ரேங்க்) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எலினா அவனிஸ்யானை (20 வயது, 134வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 37 நிமிடத்தில் முடிந்தது. மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய ரஷ்ய நட்சத்திரம் அனஸ்டசியா பாவ்லுசென்கோவா (31 வயது, 333வது ரேங்க்) 3-6, 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டன்சை (27 வயது, 28வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 3 மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச் appeared first on Dinakaran.

Related Stories: