வீட்டை தன் பெயரில் மாற்றாத ஆத்திரத்தில் தாயை அடித்து கொன்ற மகன் கைது: திருவள்ளூர் அருகே பயங்கரம்

திருவள்ளூர், ஜூன் 4: திருவள்ளூர் அருகே வீட்டை தன் பெயரில் மாற்றாத ஆத்திரத்தில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் ஆவாரம்பூ தெருவைச் சேர்ந்தவர் சேகர் என்பவரின் மனைவி மஞ்சுளா(50). இவருக்கு ராஜேஷ்(31) மற்றும் ரஞ்சித்(28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷ் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். ரஞ்சித் வேலை எதுவும் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மூத்த மகன் ராஜேசுக்கு துர்காதேவி என்ற மனைவியும், பிரகதீஷ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துர்காதேவி தனது மகனுடன் ராஜேசைப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது மகன் ரஞ்சித் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். வேலைக்குச் செல்லாதது குறித்து நேற்று முன்தினம் தாய் மஞ்சுளா ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். இதனால் மஞ்சுளாவுக்கும், ரஞ்சித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு ஆவாரம்பூ தெருவில் உள்ள மூத்த மகன் ராஜேஷ் வீட்டிற்கு தாய் மஞ்சுளா சென்றுள்ளார்.

இந்நிலையில் ரஞ்சித்தின் நண்பர் சரத் என்பவர் ராஜேசின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மஞ்சுளா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சரத், அலைபேசியில் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரஞ்சித் ராஜேசின் வீட்டுக்கு வந்து சரத்தின் உதவியுடன் காயமடைந்து மயங்கியிருந்த மஞ்சுளாவை இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மஞ்சுளாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தகவலின் பேரில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இளைய மகன் ரஞ்சித்துடன் சண்டை போட்டுவிட்டு, மூத்த மகன் ராஜேஷ் வீட்டிற்கு மஞ்சுளா வந்துள்ளார். அங்கு சென்றபோது, ராஜேஷ் குடி போதைக்கு அடிமையானதும், மனைவி மற்றும் குழந்தை ஆகிய இருவரும் அவரைப் பிரிந்து சென்றதும் மஞ்சுளாவுக்குத் தெரியவந்தது.

இந்நிலையில் ஆவாரம்பூ தெருவில் தாய் மஞ்சுளாவின் பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு மாற்றம் செய்து தரும்படி ராஜேஷ் கேட்டுள்ளார். அதற்கு மஞ்சுளா மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் இருந்த ராஜேஷ், ஆத்திரத்தில் மண்வெட்டியின் கைப்பிடியால் மஞ்சுளாவை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து மஞ்சுளா கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து ரஞ்சித்தின் நண்பர் சரத் கொடுத்த தகவலின் பேரில், மஞ்சுளாவை ரஞ்சித் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ரஞ்சித் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வீட்டை தன் பெயரில் மாற்றாத ஆத்திரத்தில் தாயை அடித்து கொன்ற மகன் கைது: திருவள்ளூர் அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: