1.75 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்

தர்மபுரி, ஜூன் 4: தர்மபுரி மாவட்டத்தில், வரும் 7ம்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் சுமார் 1.75 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடநூல், நோட்டுப்புத்தகம் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் 1,575 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில், தர்மபுரி, அரூர் தொடக்க கல்வி மாவட்டத்தில் 1165 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தர்மபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 647 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், அரூர் தொடக்கக்கல்வி மாவட்டத்தில் 518 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து, வரும் 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கும் அன்று, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடபுத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு, தர்மபுரி முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் தொடக்க கல்வி மாவட்டம் வாரியாக, அந்தந்த பகுதி பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தர்மபுரி, அரூர் தொடக்க கல்வி மாவட்டம் என 2 உள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தர்மபுரி ஒரே கல்வி மாவட்டமாக உள்ளது. தர்மபுரி முதன்மை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதிபள்ளி, ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, புதிய புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. அதேபோல், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடபுத்தகம் வழங்கப்படும்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. சென்னை மற்றும் கோவை பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை, பாடவாரியாக தரம் பிரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன், ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகளுக்கு நேரடியாக சென்று, மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு, 7 லட்சத்து 16 ஆயிரத்து 887 நோட்டுப்புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது. அதேபோல், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு 5 லட்சத்து 34 ஆயிரத்து 696 பாடநூல்கள் தயார் நிலையில் உள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்விதுறை இணைந்து இலவச பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகங்களை வழங்குகிறது. இவ்வாறு அதிகாரிகள் ெதரிவித்தனர்.

The post 1.75 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: