ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை தேவை: அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை

சென்னை: ஓடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகே உள்ள பாஹாநாகர் பஜார் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூன்று ரயில்கள் மோதலே அதிகளவு அதிக உயிர் இழப்புக்கு காரணம் என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.தெலங்கானா ஆளுநர் தமிழிசை: ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த கோர ரயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும், காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட உரிய உதவிகளை செய்யவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஒடிசா ரயில் விபத்தில் உயிர்களை இழந்தோரின் குடும்பத்திற்கு என் நெஞ்சம் உடைந்து கண்ணீரை அஞ்சலியாக தெரிவித்துக்கொள்கின்றேன். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவரின் மனிதாபிமானமும் நன்றிக்கு உரியதாகும். காயமுற்று சிகிச்சை பெறுவோர் முழுமையாக நலம்பெற வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்து விரைவில் குணமடைய தொடர் நடவடிக்கை தேவை. ஒன்றிய அரசு, ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருக்கவும், ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொள்ளவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்றாக தடம் புரண்ட விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்: ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டம், பகங்கா ரயில் நிலையம் அருகில் வரலாறு காணாத படுமோசமான ரயில் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்: ஒடிசா கோர ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இக்கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய கணிசமான பெரும் தொகையை வழங்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சுமார் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்.
இதேபோல் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்பட மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை தேவை: அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: