இந்த வார விசேஷங்கள்

5.6.2023 – திங்கள் திருநீலக்க நாயனார் குரு பூஜை

‘‘பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலுமஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை நீப்பவுப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்னெனும் வேதியனே”

என்ற திருத்தொண்டர் திருவந்தாதி திரு நீலக்க நாயனாரின் பெருமையைப் பேசும். திருநீலக்கர் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அடிபணிந்து வணங்குதலே வாழ்வின் பயன் எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்தார். சிவத்திருப்பணிகளையும் செய்துவந்தார்.

ஒருநாள் திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை வணங்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன்வர கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்து, இறைவர் திருமுன் இருந்து திருவைந் தெழுத்தினை ஓதினார்.

அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார். நாயனார் அச்செயலைக்கண்டு ‘‘நீ இவ்வாறு செய்தது ஏன்?” என்று கோபித்தார்.

“சிலந்தி விழுந்தமையால் இப்படிச் செய்தேன்” என்றார் மனைவி. ‘‘நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதினாய். இத்தகைய செய்கை செய்த யான் இனித் துறந்தேன்” என்றார். மனைவியார் என்ன செய்வது என திகைத்து அஞ்சி ஒரு பக்கம் ஒதுங்கினார்.

நீலநக்கர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். மனைவியார் அவருடன் வீடு செல்ல அஞ்சி ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீலநக்கர் துயிலும்பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம்” என்று அருளினார். நீலநக்கர் விழித்தெழுந்தார். தம் தவறை உணர்ந்தார். ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி மனைவியாரையும் உடனழைத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார்.

அந்த நாளில் ஞானசம்பந்தரின் புகழ் உலகெல்லாம் பரவியதை அறிந்தார். தாமும் திருஞானசம்பந்தரின் திருப்பாதத்தைப் தலைமிசைச் சூடிக்கொள்ள விரும்பியிருந்த வேளையில் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டுவரும் சம்பந்தப் பெருமான் சாத்த மங்கையை அடைந்தார். சம்பந்தப் பிள்ளையார் வரும் செய்தியறிந்த திருநீலநக்கர் அவரை ஆடியும் பாடியும் வரவேற்று தம் இல்லத்தில் திருவமுது செய்வித்து மகிழ்ந்தார். சம்பந்தப் பிள்ளையார் மறுநாள் எழுந்து அயவந்திப் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே நீலநக்கரையும் சிறப்பித்துப் பாடியருளினார். அவர் முக்தித் தலம் சீர்காழிக்கு அருகே நல்லூர்ப் பெருமணம். (ஆச்சாள்புரம்). குருபூஜை வைகாசி மூலம் இன்று.

5.6.2023 – திங்கள்திருஞான சம்பந்தர் குருபூஜை

வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

என்பது சேக்கிழாரின் பெரியபுரணம் ஞான சம்பந்தரின் பெருமை பேசும். தேவார மூவரில் ஒருவர். திருஞானசம்பந்தர் சோழநாட்டில் சீர்காழிப் பதியில், சிவபாத இருதயர்க்கும் பகவதி அம்மையார்க்கும் மகவாக அவதரித்தார். உமையம்மையார் கொடுத்த ஞானப்பால் அருந்தி தமிழ் பாடியவர். தெய்வக் குழந்தையாகிய திருஞானசம்பந்தர், தமது குறுகிய வாழ்நாளில், பாரதத்தின் பல்வேறு சிவாலயங்களுக்குத் தலயாத்திரை செய்தார். அவர் பாடிய முதல் தேவாரம்:

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவனன்றே

சம்பந்தருக்கு மணமுடித்து வைக்க அவரது தந்தையார் சிவபாத இருதயர் ஆசைப்பட்டார். தந்தையின் விருப்பப்படி மணம் செய்து கொள்ள சம்மதித்த திருஞானசம்பந்தருக்கும் திருநல்லூர் நம்பியாண்டார் நம்பியின் திருமகளாருக்கும் திருமணம் நடைபெற்றபோது, மணமக்களோடு கூடியிருந்த அனைவரும் இறைவனின் அருள் ஜோதியில் கலந்து மறைந்தனர். திருநீலக்க நாயனார் வாழ்வுக்கும் ஞானசம்பந்தர் வாழ்வுக்கும் தொடர்பு உண்டு. இருவரும் ஒரே நாளில் முக்தி அடைந்தனர். அவருக்கு
திருமண புரோகிதம் செய்துவைத்தவர் திருநீலக்க நாயனார். ஞானசம்பந்தரின் குருபூஜை தினம் இன்று வைகாசி மூலம்

5.6.2023 – திங்கள்திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூஜை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் திருவெருக்கத்தம்புலியூரில் (இராஜேந்திர பட்டினம் விருதாசலம் ஸ்ரீமுஷ்ணம் பாதையில் உள்ளது) பெரும்பாணர் குலத்தில் பிறந்தவர். இவர் சிவபெருமானுடைய திருப்புகழை யாழ் மூலம் இசைக்க, ஏழிசையிலும் வல்லவரான தம் மனைவியார் மதங்கசூளாமணியாருடன் பல தலங்களைப் பாடினார்.

மதுரையில் கோயிலின் வாயிலில் இறைவனது புகழ்மாலைகளை யாழிலிட்டு பாடினார். ஆலவாய் இறைவர், அன்றிரவு தம் தொண்டர்கள் கனவில் தோன்றித் திருநீலகண்டப் பெரும்பாணரை தமது திருமுன் கொண்டு புகும்படி ஆணையிட்டார்.

இறைவரது விருப்பப்படி பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் இசைத்துப் போற்றினார். தரையினிற் குளிர்ச்சி தாக்கில் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும் (சுருதி கலையும்) என்று பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் ஆணையிட பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து பாடினார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் உறையும் திருத்தலங்களை வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்தார். தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூட அடியார் திருக்கூட்டத்துடன் பெருஞ்சோதியினுட் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்றார். அவர் குருபூஜை இன்று வைகாசி மூலம்.

5.6.2023 – திங்கள் முருக நாயனார் குருபூஜை

முருக நாயனார் நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூசைக்கும் அந்தந்த கால பூசைக்கேற்ப மாலைகளைத் தயார் செய்து திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாற்றி வணங்குவார். திருஞானசம்பந்தர் எழுந்தருளிய போது அவரை எதிர்கொண்டழைத்து வந்தார். சிலநாட்கள் அவருடன் வர்த்தமானீசுவரப் பெருமானை வழிபட்டார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புகலூருக்கு வந்தபொழுது சம்பந்தருடன் அவரை வரவேற்றார். புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர்.
திருநீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார். முருகநாயனார், திருநல்லூர்ப் பெருமணத்தில் நிகழ்ந்த சம்பந்தரின் திருமணவிழாவிற் கலந்துகொண்டு அவரோடு ஜோதியில் கலந்தார். அவர் குருபூஜை இன்று வைகாசி மூலம்.

6.6.2023 – செவ்வாய் குமரகுருபரர் குருபூஜை

ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்தவர். குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத்திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்ட முருகனின் அருளால் பேசும் திறனை அடைந்தவர்.

முருகன் மீது கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசுபுரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் இயற்றினார். குமரகுருபரர் காசிக்குச் சென்று காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்த்தார்.

காசிமடம் திருப்பனந்தாழிலும் உள்ளது. மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக் கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய நூல்களாகும். அவர் குருபூஜை இன்று.

7.6.2023 – புதன் சங்கடஹர சதுர்த்தி

சூரியனுக்குரிய உத்திராடம் நட்சத்திரத்தில் இன்று சதுர்த்தி விரதம். வெற்றிலை மாலை சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றிகள் வீடு தேடி வரும். செல்வம் பெருகும். சதுர்த்தி தினமான இன்று விநாயகர் கோயிலுக்குச் சென்று வணங்க சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

9.6.2023 – வெள்ளி தஞ்சையில் 24 கருடசேவை

வராக பெருமானிடம் பகை கொண்டு போர் தொடுத்து அழிந்த இரண்யாட்சன் மகள் ஜல்லிகை என்பவள், திருமாலிடம் பேரன்பு பூண்டு கடுந்தவம்புரிந்து திருவருள் பெற்றாள். அவளுக்கு ஸ்வேதா, சுக்லா என்ற இரண்டு பெண் பிள்ளைகளும், தண்டகாசூரன் என்ற ஆண்பிள்ளையும் பிறந்தனர்.

பெண்கள் பெருமாளிடம் பக்தியோடு இருக்க, தண்டகன் தன்னுடைய தாய்வழிப் பாட்டனாரைக் கொன்றவராக பெருமாளிடம் கோபம் கொண்டான். பழிவாங்க நினைத்தான். அவன் தாயார் சொல்லியும் கேட்கவில்லை. கடும் தவம் செய்து பல வரங்களைப் பெற்றவன்.

ஆணவம் அதிகரிக்க தாத்தாவைப் போலவே முனிவர்களுக்குக் கொடுமைகளைச் செய்ய ஆரம்பித்தான். முனிவர்கள் இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாது திருமாலிடம் சென்று வேண்டினர். அவரும் தண்டகன் போர்செய்ய விரும்பிய வராகத் திருமேனியோடு காட்சி தந்தார். அவனோடு போர்புரிந்தார். கடைசியில் தண்டகா சூரனை கொன்றார். அவன் அன்னை பெருமாளிடம் பத்திகொண்டிருந்ததால்,
தண்டகாசூரனுக்கும் பரமபதம் நல்கினார்.

இத்தனை சிறப்பு பெற்ற தலமே இப்பொழுது வெண்ணாற்றங்கரை என்று வழங்கப்படும் தஞ்சை மாமணிக்கோயில் ஆகும். எனவே இத்தலம் வராகத் தலமாக வழங்கப் பெறுகிறது. ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், இந்தக் கோயிலோடு சேர்த்து தஞ்சாவூரில் 24 பெருமாள் கோயில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அந்த கருடசேவை கண்டருளும் காட்சி இன்று நடக்கிறது.

கருடசேவையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் கோயில், மணிகுன்றாப் பெருமாள் கோயில், மேல சிங்கப்பெருமாள் கோயில், வேளூர் வரதராஜர் கோயில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில், மேலவாசல் ரெங்கநாதர் கோயில், விஜய ராமர் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், ஜனார்த்தன பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், கீழ கோதண்டராமர் கோயில், கீழ சிங்கபெருமாள்கோயில், பூலோக கிருஷ்ணர் கோயில், படித்துறை வெங்கடேசப்பெருமாள் கோயில், பஜார் ராமர் கோயில் உள்ளிட்ட 24 கோயில்களிலிருந்து கருடவாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வரிசையாக கொடி மரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக பொதுமக்களுக்கு அருள்பாலிப்பர்.

9.6.2023 – வெள்ளி பாம்பன் சுவாமிகள் குருபூஜை

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேஸ்வரத்தில் பிறந்து வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று முருகனை வழிபட்டு வந்த ஒரு மகான். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், முருகனுக்கும் தம் பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறுமண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முகக் கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள், மே.30,1929-ல் சமாதி அடைந்தார். அவரது சமாதி சென்னை, திருவான்மியூரில் உள்ளது. அவர் குருபூஜை இன்று.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: