ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் நேரில் ஆய்வு

ஒடிசா: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரதமருடன் ஒன்றிய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் .

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிக்கிய பயணியரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தையடுத்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாலசோரில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார்.

பிரதமருடன் அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பிரதமர் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பின்னர் காட்டாக் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளார். ஒடிசாவில் ஏற்பட்ட இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.

The post ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: