ஐபிஎல் தொடரின் சிறந்த அணி எது?: செல்லமாக மோதிக்கொண்ட பொல்லார்ட்-பிராவோ

மும்பை: சென்னை மற்றும் மும்பை அணிகளில் எது சிறந்த அணி என்று பொல்லார்ட்டும், டுவைன் பிராவோவும் செல்லமாக சண்டை போட்டுக்கொண்டுள்ளது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணி விளையாடிய 14 சீசன்களில் 5 முறை கோப்பையை வென்றதோடு, 10 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கும் தகுதிபெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 2 முறை மட்டுமே சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் சென்னை அணியே சிறந்த அணி என்று சிஎஸ்கே ரசிகர்களும், அதெல்லாம் இல்லை மும்பை அணியே சிறந்த அணி என்று பல்தான் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களைப்போல் மாஜி வீரர்களான சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோவும், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டும் எந்த அணி சிறந்தது என்று விவாதித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் ஒரே வீடியோவில் பேசுகையில், “மும்பை அணியே ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணி’’ என்று பொல்லார்ட் கூறுகிறார்.

ஆனால் சாதனைகளும் கோப்பைகளும் சென்னை அணியே வெற்றிகரமான அணி என்று சொல்கிறது. அதேபோல் பொல்லார்ட், அதிக கோப்பைகளை வென்றவர்கள் யார் என்றும் பேச விரும்புகிறார். அப்படி பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக 17 கோப்பைகளை ஒரு வீரராக வென்றிருக்கிறேன். ஆனால் பொல்லார்ட் அனைத்து லீக் தொடர்களையும் சேர்த்து 15 கோப்பைகளை தான் வென்றிருக்கிறார். அதனால் எனக்குதான் மரியாதை கொடுக்க வேண்டும் என்று பிராவோ சொல்கிறார். இவ்வாறு இருவரும் செல்லமாக கலாய்த்துக்கொள்ளும் வீடியோ சென்னை மற்றும் மும்பை அணி ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

The post ஐபிஎல் தொடரின் சிறந்த அணி எது?: செல்லமாக மோதிக்கொண்ட பொல்லார்ட்-பிராவோ appeared first on Dinakaran.

Related Stories: