ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தோரின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசா ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த எத்தனை பேர் ரயிலில் பயணித்தார்கள் உள்ளிட்ட விவரங்களை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ரயிலில் முன்பதிவு செய்த தமிழ்நாடு பயணிகளின் விவரங்களையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த காயமடைந்த பயணிகள் விவரங்களையும் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வர செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளோம். அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர்.ஒடிசா முதலமைச்சரிடம் பேசி தேவையான உதவிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளேன்.ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்கள் உடலை தமிழ்நாடு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு பயணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து பயணிகளை தமிழ்நாடு அழைத்து வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்படுகின்றனர்,’என்றார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தோரின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: