ஏழுமலையான் கோயிலில் உற்சவர் சிலை பாதிக்காமல் இருக்க தங்க கவசம் அகற்றப்பட்டு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்: இன்று முத்துகவசம் அணிவிக்கப்படுகிறது

திருமலை: ஏழுமலையான் கோயிலில் உற்சவர் சிலை பாதிக்காமல் இருக்க தங்க கவசம் அகற்றப்பட்டு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. உற்சவருக்கு இன்று முத்துகவசம் அணிவிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவருக்கு தினந்தோறும் மற்றும் வாராந்திர சேவைகள் என 450 உற்சவங்கள் நடத்தப்படுகிறது. இதில் தொடர்ந்து உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் உற்சவர் சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க அணிவிக்கப்பட்ட தங்க கவசம் அகற்றப்பட்டு, பழுதுபார்ப்பது மற்றும் புதுப்பிக்க நகை பிரிவுக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும் பஞ்சலோக உற்சவர் சிலைகளுக்கு யாக சாலையில் சாந்தி பூஜை நடத்தி மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இந்த உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகத்தை யொட்டி தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது.

மாலை வைர கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரண்டாவது நாளான இன்று முத்து கவசமும், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட உள்ளது. இந்த உற்சவத்தில் செயல் அலுவலர் தர்மா உள்ளிட்ட அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post ஏழுமலையான் கோயிலில் உற்சவர் சிலை பாதிக்காமல் இருக்க தங்க கவசம் அகற்றப்பட்டு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்: இன்று முத்துகவசம் அணிவிக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: