அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக கேரள சபை நிகழ்ச்சியில் பினராயி விஜயனின் அருகில் அமர ரூ.82 லட்சம்?காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்: அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக கேரள சபை நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் அருகே அமர ரூ.82 லட்சம் வசூலிப்பதற்கு காங்கிரஸ், பாஜக முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக கேரள சபை என்ற அமைப்பு கடந்த சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

லூலூ குழும தலைவர் எம்.ஏ. யூசுப் அலி உள்பட ஏராளமானோர் இந்த சபையில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சபையின் பல கூட்டங்கள் திருவனந்தபுரத்தில் நடைபெற்றன. இந்நிலையில் இந்த உலக கேரள சபையின் அடுத்த கூட்டம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயனின் அருகே அமருவதற்கு ரூ.82 லட்சம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன், எம்பி கூறியது: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு அருகே யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது. இப்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் அருகே அமருவதற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக கேரள சபை நிகழ்ச்சியில் பினராயி விஜயனின் அருகில் அமர ரூ.82 லட்சம்?காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: