எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவடைவதால் 2024 தேர்தல் முடிவு ஆச்சரியத்தை தரும்: அமெரிக்காவில் ராகுல் அதிரடி

வாஷிங்டன்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதால், 2024 மக்களவை தேர்தல் முடிவு ஆச்சரியத்தை தரும் வகையில் இருக்குமென அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறி உள்ளார். அமெரிக்காவில் 3 நகரங்களில் சுற்றுப்பயணம் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டனில் பிரபல அமெரிக்க இந்தியரான பிராங்க் இஸ்லாம் வரவேற்பு நிகழ்ச்சியிலும், நேஷனல் பிரஸ் கவுன்சிலின் செய்தியாளர்கள் கூட்டத்திலும் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பாஜவும் ஆர்எஸ்எஸ்சும் தடுக்க முடியாத சக்திகள் என்று மக்கள் நம்பும் போக்கு உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. இந்த இடத்தில் எனது சிறிய கணிப்பை கூறுகிறேன்.

நாங்கள் பாஜவுடன் நேரடியாக போட்டியிடும் அடுத்த மூன்று அல்லது நான்கு சட்டப்பேரவை தேர்தல்களில் அக்கட்சி தோல்வியை தழுவி, அழிவை சந்திப்பதை நீங்கள் காண்பீர்கள். அடுத்து வரக்கூடிய தேர்தல்கள் அவர்களுக்கு கடினமானதாக இருக்கும். கர்நாடகாவில் நாங்கள் வென்றதைப் போலவே அடுத்தடுத்த மாநிலத்திலும் வெல்வோம். அதற்கான அடிப்படை தேவைகளை நாங்கள் கொண்டுள்ளோம். தயவுசெய்து ஒன்றை உணருங்கள், இந்தியாவில் 60 சதவீதம் பேர் பாஜவுக்கு வாக்களிக்கவில்லை, அவர்கள் ஆதரவு மோடிக்கு இல்லை. பாஜவிடம் தம்பட்டம் அடிக்கும் கருவிகள் நிறைய உள்ளன. அதனால் ஒரு விஷயத்தை மிகைப்படுத்துவதில் அவர்கள் வல்லவர்கள். எனவே, காங்கிரசால் பாஜவை தோற்கடிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

வரும் மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த வலுவான கூட்டணி தேவை. தெளிவான செயல்திட்டமும் அவசியம். இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு வருகின்றன. நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசி வருகிறோம். நிறைய நல்ல வேலைகள் நடக்கின்றன. இது சிக்கலான விஷயம்தான். ஏனெனில் தேவைக்கேற்ப விட்டுக் கொடுத்து பெற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதுவும் நடக்கும் என நம்புகிறேன். எனவே 2024 மக்களவை தேர்தல் முடிவு நிச்சயம் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். இந்தியாவில் தற்போது சுதந்திரமான அமைப்புகளை கைப்பற்றுவது கட்டுப்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பத்திரிகைகள் உறுதியாக கைப்பற்றப்பட்டுள்ளன.

மோடியை தோற்கடிக்க இயலாது என்று ஊடகங்கள் சொல்லி வருகின்றன. அதில் பல மிகைப்படுத்தப்பட்டவை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற விஷயங்கள் மக்களை மிகவும் கடினமாக பாதித்து வருகின்றன. இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்ய ஏற்கனவே மிகவும் வலுவான அமைப்பு உள்ளது. ஆனால் அந்த அமைப்பு தற்போது பலவீனமடைந்துள்ளது. எனவே அழுத்தம் தரப்படாத, கட்டுப்படுத்தப்படாத தன்னாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதுதான் இந்தியாவில் வழக்கமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விரைவில் அவற்றை மீட்டெடுக்க முடியும்.

எனது எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு ஜனநாயகம் தாக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. இது ஜனநாயகத்தைத் தாக்கும் முறை. ஆனால் ஒருவகையில் எனக்கு நல்லது தான். ஏனென்றால் இதன்மூலம் நான் என்ன செய்யவேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எனக்கு அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு, பாசம், ஆதரவுக்கு நன்றி. இந்த அமெரிக்க பயணத்தில், இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக போராட பலர் தயாராக இருப்பதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* பாஜ கண்டனம் காங்கிரஸ் பதிலடி
நேஷனல் பிரஸ் கிளப்பில் செய்தியாளர் ஒருவர், கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உடனான காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார். ‘பாஜ மதம் சார்ந்த கட்சி என்கிற போது, முஸ்லீம் லீக் எப்படி மதச்சார்பற்ற கட்சி ஆகும்’ என கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல், ‘‘முஸ்லீம் லீக் முற்றிலும் மதச்சார்பற்ற கட்சி. அதில் மதம் சார்ந்த எந்த விஷயமும் இல்லை’’ என பதிலளித்தார். இதற்கு பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘பிரிவினைக்குப் பின் ஒதுங்கியவர்கள், முஸ்லிம் லீக்கை உருவாக்கி எம்பி ஆனார்கள். ஷரியா சட்டத்திற்காக வாதிட்டனர். முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டனர்.

இந்து பயங்கரவாதத்தை பார்க்கும் ராகுல் காந்தியும், காங்கிரசும் முஸ்லிம் லீக் மதச்சார்பற்றதாக கூறுவது துரதிஷ்டவசமானது’’ என்றார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்து மகாசபா தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி, ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துதான் வங்காளத்தில் ஆட்சி அமைத்தார் என்கிற வரலாறை பாஜ அறிய வேண்டும். இந்தியாவின் பிரிவினைக்கு வித்திட்டது ஜின்னாவின் முஸ்லீம் லீக். இப்போது கேரளாவில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம்லீக் என்பது பாஜவுக்கு தெரியாதா? என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

The post எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவடைவதால் 2024 தேர்தல் முடிவு ஆச்சரியத்தை தரும்: அமெரிக்காவில் ராகுல் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: