உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம்மாழ்வார் அவதார திருநாள் – 2.6.2023 (வைகாசி விசாகம்)

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்?
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு? தென் குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்?

– என்பது மணவாள மாமுனிகளின் வாக்கு.

வைணவ மரபில் ஆழ்வார்கள் பரம்பரை, ஆச்சாரியர்கள் பரம்பரை என்று உண்டு. ஆழ்வார்கள் பரம்பரை நம்மாழ்வாரில் தொடங்கி திருமங்கை ஆழ்வாரில் நிறைவுபெறும். ஆச்சார்யர்கள் பரம்பரை, இரண்டு பிரிவாக உள்ளது. வடகலைப் பிரிவு, தென்கலைப் பிரிவு. இதில் தென்கலைப் பிரிவு நம்மாழ்வாரில் தொடங்கி மணவாள மாமுனிகளோடு நிறைவுபெறும்.

நம்மாழ்வார் இரண்டு வரிசையிலும் வருவார். ஆழ்வார்களில் அவர்தான் தலைமை ஆழ்வார். ஆச்சார்யர்களில் அவர்தான் முதல் ஆச்சார்யர். நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி, எம்பெருமானார் (இராமானுஜர்) எம்பார். பட்டர், நஞ்ஜீயர், வடக்குத் திருவீதிப் பிள்ளை உலக ஆசிரியர், திருவாய் மொழிப்பிள்ளை, மணவாள மாமுனிகள் என்று வரிசையாக வரும்.

இந்த வரிசையில் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் குமாரர்கள் இருவர். ஒருவர் பிள்ளை உலக ஆசிரியர். அவர் வைணவத்தின் ரகசிய நூல்களான அஷ்ட தசா ரகசியம் என்னும் 18 மறை நூல்களை அருளிச்செய்தவர். அவற்றுள் “ஸ்ரீவசன பூஷணம்’’ என்ற நூல் அற்புதமானது. மணவாளமாமுனிகள் இந்த நூலை உச்சி மீது வைத்து கொண்டாடுகின்றார்.

ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார் – ஓரொருவர்
உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாததன்றோ அது

பிள்ளை லோகாச்சாரியாரின் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அவர் “திருப்பாவை’’, “அமலன் ஆதிபிரான்’’, “கண்ணிநுண் சிறுத் தாம்பு’’ ஆகிய நூல்களுக்கு உரை செய்தவர். ஆச்சார்ய இருதயம் என்னும் ஒப்பற்ற நூலை அருளிச்செய்து பெரும்புகழ் கொண்டவர். ஆச்சாரிய இருதயம் 234 சூத்திரங்களை உடையது. மிக அற்புதமானது. இதில் “ஆச்சாரிய’’ என்பது நம்மாழ்வாரையும், “இருதயம்” என்பது அவருடைய திருவுள்ளத்தையும் குறிக்கும்.

நம்மாழ்வாரின் திருவுள்ளத்தைப் பற்றிய நூல் என்று இந்த நூலைச் சொல்லலாம். இந்த நூலின் மூலமாக வேதங்களைப் பற்றியும், தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றியும், நம்மாழ்வாரின் சிறப்பைப் பற்றியும் அவர் அருளிச்செய்த திருவாய் மொழியின் தனிப்பெருமையையும் பல்வேறு திவ்ய தேசங்களைப் பற்றியும் பல நுட்பமான செய்திகளை நாம் தெரிந்துகொள்ளலாம். இந்த நூல் ஆழ்வார்களின் பிரபந்தத்தில் உள்ள சொற்களையே கொண்டும், அக்காலத்தில் செல்வாக்காக இருந்த பல வேத, உபநிடத, புராண, இதிகாச, நீதிநூல்களில் உள்ள வடமொழித் தொடர்களையும் இணைத்து மணிப் பிரவாளத்தில், உரைநடைச் சூத்திரங்களாகச் சொல்லப்பட்ட நூல்.

ஆசிரியர் தம்முடைய சொந்த சொற்களை மிக மிக குறைவாக, இணைப்புக்காக மட்டுமே, பயன்படுத்தி உள்ளார். இதை படிப்பது கடினம். இதற்கு மணவாள மாமுனிகள் மிக விரிவான உரையை அருளிச் செய்திருக்கிறார்.அந்த உரையையும் முறையான பயிற்சியின்றி நாம் எளிதில் படித்துவிட முடியாது. மரபும், வடமொழியிலும் தென்மொழியிலும் (தமிழ்) நல்ல பயிற்சி இருந்தால்தான் நாம் இந்த நூலைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும்.

இந்நூல் நான்கு பகுதிகளைக் (பிரகரணங்கள்) கொண்டது. முதல் பகுதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி பதிலை ஆராய்கிறார். எதற்காக வேதங்கள் கொடுக்கப்பட்டன? சாஸ்திரங்கள் ஏன் கொடுக்கப்பட்டன? வேதம், நம்மாழ்வார் பாசுரங்கள் இவற்றின் பெருமை என்ன? நம்மாழ்வாரின் உயர்வு என்ன? நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய் மொழியின் உயர்வு என்ன? ஆகிய விஷயங்கள் இதில் அலசப்படுகின்றன. இவைகள் எல்லாம் வாதப் பிரதிவாதங்களாக மிகநுட்பமான முறையில் விளக்கப்படுவது இந்நூலின் சிறப்பு. இரண்டாம் பகுதியில் ஆழ்வாரின் பக்தி அனுபவத்தின் தன்மையை விளக்குகின்றார்.

குறிப்பாக, அவருடைய நாயகி பாவத்தின் சிறப்பை விளக்குவதோடு, அகத்துறையில் அமைந்த திருவாய்மொழிப் பாசுரங்களின் உட்கிடக்கை (கருப்பொருள்) என்ன என்பதை மிக விரிவாக விரித்துரைக்கிறார். மூன்றாம் பகுதியில் பல்வேறு திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனின் குணங்கள், பாசுரங்களில் ஏன் தூது விடுகிறார்கள்? அதனுடைய பொருள் என்ன? கீதைக்கும் திருவாய்மொழிக்கும் என்ன ஒப்புமை? பகவத்கீதையைவிட ஆழ்வார் உபதேசம் எப்படிச் சிறந்தது? என்பதை எல்லாம் விளக்குகின்றார்.

நான்காம் பகுதியில் திருவாய்மொழியின் சாரமான கருத்து, ஒவ்வொரு பதிகத்துக்கும் (அதாவது பத்து என்று சொல்வார்கள் முதல் பத்து, இரண்டாம் பத்து) தனித்தன்மைகள் என்ன? இறைவன் திருவருளால் ஆழ்வார் பெற்ற ஏற்றம் என்ன? முதலிய விஷயங்கள் விளக்குகின்றார். வைகாசி விசாகத்தில் பிறந்த ஆழ்வாரின் உயர்வு, அவர் பாடிய திருவாய்மொழியின் சிறப்பு இவற்றைப் பற்றிய சில செய்திகளை ஆசாரிய இருதயம் எப்படி விரித்துரைக்கிறது என்று பார்ப்போம்.

ஆச்சாரிய இருதய சூத்திரக்காரர் நம்மாழ் வாரின் சிறப்பைப் பற்றி சொல்லத் தொடங்குகிறார். வால்மீகி, ராமாயணம் இயற்றினார். நான்முகன் திருவருளால் ராமாயணம் தோன்றியது. அதில் ராம கதை மட்டும் பேசப்படவில்லை. வேறு எத்தனையோ செய்திகள் உண்டு. கங்கை பிறந்த கதை, சிவபெருமானின் பெருமை, பல்வேறு உலக விஷயங்கள் எல்லாம் அதிலே பேசப்படுகின்றன. அது முழுமையாக பகவானின் பெருமையை, பகவத் விஷயமாக மட்டும் பேசுகின்ற நூலாகக் கொள்ளமுடியாது. மிகச்சிறந்த விஷ்ணு புராணத்தை பராசர முனிவர் பாடினார். ஆனால் அவர் புலத்தியன் என்கிற ரிஷியால் தூண்டப்பட்டுப் பாடினார். இப்படி இதிகாச புராணங்கள் பாடியமைக்கு மூல காரணமாக ரிஷிகளின் தூண்டுதல்கள் அமைந்தன. (இறைவனே நேரடியாக தூண்டவில்லை என்று பொருள்).

ஆனால், நம்மாழ்வார் நேரடியாக பகவானுடைய திருவருளைப் பெற்று திருவாய்மொழியைப் பாடினார். அதாவது நம்மாழ்வார் இறைவனின் பெருமையை தம்முடைய திருவாக்கால் சொல்லவில்லை. இறைவன் நம்மாழ்வாரை ஒரு கருவியாக்கி, தன்னுடைய பெருமையைத் தானே வெளிப்படுத்தினான். அதுதான் திருவாய்மொழி. இதற்கு அருமையான சூத்திரத்தை அவர் அருளிச் செய்திருக்கிறார்.

“என்னைத் தன்னாக்கி,
என் நா முதல் வந்து புகுந்து,
தப்புதல் அறத் தன்னை
வைகுந்தன் ஆகத்தான்,
சொல்லால் தானே துதித்து,
என் சொல்லால் யான் சொன்ன

இன் கவி, என் பித்தான் (ஆச்சார்ய ஹ்ருதய சூத்திரம்)
இதற்கு ஆதாரம் நம்மாழ்வார் பாசுரம்
இன் கவி பாடும் பரம் கவிகளால்,
தன் கவி தான் தன்னைப் பாடவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை,
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.

வைகுந்த நாதனே என்னைக் கவிபாடச் செய்தான் என்கிறார் நம்மாழ்வார்.

ரிஷிகள் பாடியதற்கும், நம்மாழ்வார் பாடுவதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. ரிஷிகள் தவம் செய்து, ஞானம் பெற்று, அந்த ஞானத்தின் விளைவாக தாங்கள் எந்த அளவுக்கு எம்பெருமானை உணர்ந்தார்களோ, அந்த அளவிற்கு மட்டுமே இறைவனைப் பாடினார்களே தவிர, தங்களுடைய சுய அனுபவமாக, தங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, தங்கள் அன்பின் பெருக்காக, அவர்கள் பாடவில்லை. ஆனால், நம்மாழ்வார் ஒரு காரணமும் பற்றாமல், இறைவனே அருளிய ஞானத்தினாலே (மயர்வற மதிநலம்) பக்தி நிலை அடைந்து, அந்த பக்திநிலை முற்றி, பரம பக்தியாகி, அதிகபட்ச வெளிப்பாடாக பிரேம பாவத்தை அடைந்து, அன்புப் பெருக்கெடுத்து, அகம் கரைந்து, நெஞ்சு உருகி, அழுதும் தொழுதும் அற்புதத் தமிழில் பாமாலைகள் சூட்டினார்.

ஆக, ரிஷிகளின் வாக்கை மிஞ்சிய ஒரு நெளிவும் சுளிவும் இணக்கமும் உருக்கமும் உணர்ச்சியும் நம்மாழ்வார் திருவாக்கிலே காண முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு பாசுரத்தைச் சொல்லலாம். கண்ணனுடைய பெருமைகளை ஒரு திருவாய் மொழியில் பாடத் தொடங்குகிறார் நம்மாழ்வார். கண்ணன் பல்வேறு விதமான லீலைகளைப் புரிகின்றான். வெண்ணையைத் திருடுகின்றான்.

அவனைப் பற்றி பலரும் தாயான யசோதையிடம் புகார் பேசுகின்றனர். தன் குழந்தையின் மீது வருகின்ற பழிச்சொற்களைப் பொறுக்க முடியாத தாய் அசோதை, என்ன செய்வது எப்படி தண்டிப்பது என்று தெரியாமல், ஒரு பழந் தாம்பால் அவனை இழுத்து வந்து, அடித்து, அவனுடைய இடுப்பில் கட்டி, ஒரு உரலோடு பிணைத்து விடுகின்றாள். இதை கண்டு உள்ளம் உருகுகின்றார் நம்மாழ்வார்.

தேவாதி தேவனான, தேவர்களுக்கும் எட்டாத, அந்த இறைவனை, ஒரு ஆயர் குலப் பெண், இப்படி கயிற்றால் கட்டி வைக்க எப்படி முடிந்தது? உலகங்களை எல்லாம் கட்டக்கூடிய பெருமான், இந்தப் பெண் கட்டிய கட்டுக்கு கட்டுப்பட்டு உரலோடு பிணைந்து அழுது கொண்டு இருந்தானே எப்படி? இப்படிப்பட்ட எளிமையா எம்பெருமானுடைய எளிமை என்று நினைத்து உள் உருகி மூவாறு மாதம் (18 மாதங்கள்) மோகித்து மயங்கிக் கிடந்தாராம்.

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரலிடை ஆப்புண்டு
எத்திறம்! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே

எம்பெருமானுடைய பெருமைகளையும் லீலைகளையும் குறித்து ரிஷிகள் இந்த அளவு மோகித்துக் கிடந்து பாடவில்லை என்பதால், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கும் நம்மாழ்வாரின் அன்புக்கும் ஏற்றம் அதிகமாகிறது. மேலும், ரிஷிகள் வேதம் பயின்றவர்கள். யோகத்தினால் இறைவனைக் காணுகின்ற திறன் மிக்கவர்கள். இவை இரண்டும் அவர்களுக்கு முழுமையான ஒரு தெளிவை தருவதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் சுய முயற்சி எனும் வெளிச்சத்தில் இறைவனைக் கண்டவர்கள். இந்த வெளிச்சம் ஒவ்வொரு ரிஷிகளுக்கும் ஒவ்வொரு அலகில் இருக்கும் என்பதால் அந்த காட்சியை தெளிவோடு சொல்ல இயலவில்லை. ரிஷிகளின் வாக்கில் வெறுப்பது உண்டு.

இறைவனிடம் அவர்கள் கேட்ட வரங்களிலும் பெருமையோ தெளிவோ இல்லை. காமியார்த்தமான யாகங்கள் நிறையச் செய்வார்கள். பாற்கடலைக் கடைந்து கொடுத்த இறைவனை வைத்துக்கொண்டு, தேவர்கள் உப்புச்சாறு என்று சொல்லப்படுகின்ற அமுதத்தைக் கேட்டார்களே தவிர, ஆரா அமுதமான இறைவனையே கேட்கவில்லையே! ரிஷிகள் பலர் ஆசா பாசங்களை விடாமல் சமயத்தில் மாட்டிக் கொள்ளுகின்றனர்.

விஸ்வாமித்திர மகரிஷி திரி சங்கு சொர்க்கத்தை ஏற்படுத்தியதும், அதனால் தவ வலிமை இழந்ததும், மேனகையோடு வாழ்ந்ததும், கண்ணனிடம் என் புத்திரனை மீட்டுக்கொடு என்று கேட்டதும், ஆசையை விடாது வாழ்ந்ததும் எனப் பல விஷயங்கள் புராணங்களில் காணப்படுகிறது. ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பொருள் பற்று பாசம் முதலியவை இருந்தது. ஆனால், நம்மாழ்வார் இறைவன் அருளால் இறைவனைக் கண்டவர். தன்னைக் காணும்படி தானே வலிந்து போய் நம்மாழ்வாருக்கு அருள்செய்தான். அதனால்தான் முதல் பாசுரத்தைப் பாடும் பொழுதே, இந்த ஆசாபாசங்கள் எல்லாம் என்னை விட்டுப் போக வேண்டும் என்பதை பிரார்த்தனையாக வைத்தார்.

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்,
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை, உயிர் அளிப்பான் –
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே.

ரிஷிகள் காடுகளிலே கிடைத்ததை உண்டு வாழ்ந்தவர்கள். காய்கனி, இலை, காற்று, நீர், ஆகியவற்றை உண்டு தவம் செய்தவர்கள். ஆனால் பதினாறு வருடம் தீர்த்தம்கூட அருந்தவில்லை. ஆயினும் அவர் நாளுக்கு நாள் பிரகாசத்தோடு இருந்தார். காரணம் அவர் உண்ட உணவு வேறு. நம்மாழ்வாருக்கு காய்கனி, இலை, நீர், தாரகம், உண்பது, பருகுவது, தின்பது, மூச்சு விடுவது, பேசுவது எல்லாமே கண்ணன்தான்.

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் எனக்குக் கண்ணனே என்ற நிலை நம்மாழ்வார் நிலை. வியாசர் வசிஷ்டர் முதலிய ரிஷிகள், தம் புதல்வர்களை இழந்த பிரிவாற்றாமை தாங்காமல் வருந்தியது புராணங்களில் தெரிகிறது. நம்மாழ்வாரோ இறைவனைப் பிரிந்தால் தான் வருந்துவாரே தவிர இறைவனால் படைக்கப்பட்ட எந்தப் பொருளை இழந்தாலும் அழுவதில்லை. இறைவன் அவரோடு பேசினால் சிரிப்பார்.

இறைவன் காட்சி அவர் திருவுள்ளத்தில் மறைந்தால் வருந்துவார். ஆனால் ரிஷிகள் அப்படி அல்ல. நம்மாழ்வார் நாயகி பாவம் ஏறிட்டு அவன் எங்கே இருக்கிறான் என்று அழுதும் தொழுதும் பாடிய உருக்கமான பாடல் போன்று ரிஷிகள் பாடவில்லை.கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும், சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும், எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இருநிலம் கை துழா இருக்கும்,செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்கின்றாயே? இறைவனை நினைத்து உருகும் தன் பெண்ணின் நிலை குறித்து தாய்பாடும் பாசுரம் இது. இரவும் அவள் தூங்கவில்லை. பகலும் அவர் தூங்கவில்லை. காரணம் கண்ணனுடைய பிரிவு அவளுக்குத் தாங்கவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடுகிறது. அதுவே காவேரி ஆறாக மாறுகிறது.

பகவான் மேலே இருக்கிறானா என்று வானத்தையே பார்க்கிறாள். சங்கு சக்கரங்கள் எங்கேயாவது தெரிகிறதா என்று நோக்குகிறாள். இதெல்லாம் நம்மாழ்வார் திருவாய் மொழியில் வருகின்ற விஷயங்கள். இந்த உருக்கம் ரிஷிகள் வாக்கியத்தில் இல்லை. காரணம் இந்த அனுபவம் அவர்களுக்கு இலை.ரிஷிகள் தவத்தால் முயற்சி செய்தார்கள். அப்படியும் அவர்கள் காமியார்த்தமான சில பலன்களையும், கைவல்யத்தையும் பெற்றார்களே தவிர, மோட்ச உலகத்தை விரும்பவில்லை. பகவானுக்கு நித்ய கைங்கரியம் செய்வதையும் விரும்பவில்லை.

தங்களுடைய ஞானத்தினால் கருமத்தினால் அவரைக் குறித்து தவம் செய்தார்கள். தவம் என்பது அவர்களுக்கு, இறைவனை தரிசனம் செய்வதற்கும் வரம் பெறுவதற்கும் ஒரு கருவியாகியது. அதாவது, உபாயம் என்பார்கள். ஆனால் நம்மாழ்வாரை பொறுத்தவரையில் அவர் இறைவனின் அருளைக் கொண்டே இறைவனை அடைந்தவர். வழியும் அவனே, அடையும் பயனும் அவனே என்ற கொள்கை உடையவர். அவனை தன் உகப்புக்காக தொழுதவர் அல்ல. அவனுடைய உள்ள உகப்பே முதன்மையாகக் கொண்டு அவனை வழிபட்டவர்.

ரிஷிகள் ஒவ்வொரு பலனுக்கும் ஒவ்வொரு தேவதையாக பல தேவதைகளை வணங்குவதை புராணங்களில் காணலாம். அதனால் பலன்களிலும் மாறுபாடுகள் இருக்கும். ஆனால், நம்மாழ்வார் மற்றொரு தெய்வம் தொழாள் என்று சொல்லும்படியாக கண்ணனை அல்லால் இல்லை தெய்வம் கண்டீர் சரண் நமக்கே என்று அழுத்தமாகச் சொன்னவர். பலன், வழி, நோக்கம் என இந்த மூன்றிலும் நம்மாழ்வார் மற்ற ரிஷிகளைவிட மேம்பட்டவர் என்பது ஆச்சாரிய ஹ்ருதய சூத்திரகாரனுடைய முடிவு. நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சொல்லுகின்ற பொழுது, பகவான் தேவர்களுக்குப் பாற்கடலைக் கடைந்து அமுதம் கொடுத்தான்.

அது எல்லோருக்கும் ஆனது அல்ல. ஆனால், நம்மாழ்வார் திருவாய்மொழியை பக்தர்களுக்கு அமுதமாகத் தந்தார் (பக்தாம்ருதம்) என்பதை நாதமுனிகள் ஒரு தனி பாட்டிலே (தனியன்) அருளிச்செய்கிறார்.

பக்தாம்ருதம் விஸ்வஜநாநுமோதநம்
ஸர்வார்த்தம் ஸ்ரீஸடகோப வாங்மயம்
ஸஹஸ்ரஸா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம்த்ராவிடவேத ஸாகரம்.

அதுதான் திருவாய்மொழியின் பெருமை. அதுதான் நம்மாழ்வாரின் பெருமை.

தொகுப்பு: பாரதிநாதன்

The post உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்? appeared first on Dinakaran.

Related Stories: