பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசுத் தலைவரை சந்திக்க விவசாய சங்கங்கள் திட்டம்!!

டெல்லி : பாஜக எம்.பி. மீதான பாலியல் புகார் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்க இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக போராடியும் பலன் அளிக்காததால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நாளில், அந்த கட்டிடம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசாரால் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் தங்கள் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்கான ஹரித்வாரில் திரண்டனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் சங்கத்தினர் மல்யுத்த வீரர்களை சமாதானம் செய்து பதக்கங்களை பெற்றுக் கொண்டு, 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு கெடு விதித்துள்ளனர். மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்கபடாவிட்டால் வரும் 5ம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நுழைய விட மாட்டோம் என்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சவுரம் கிராமத்தில் மகா பாரதிய கிஷான் யூனியன் சார்பில் மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய நரேஷ் திகைத், மல்யுத்த வீரர்களின் பக்கம் நிலைத்து நிற்பதாகவும் தேவைப்பட்டால் குடியரசு தலைவரை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினர். பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். பதக்கங்களை கங்கையில் வீசி எரியாமல் அவற்றை ஏலம் விட்டால் ஒட்டுமொத்த உலகமும் திரண்டு வந்து ஏலத்தை நிறுத்தும் என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் தெரிவித்ததாக நரேஷ் தெரிவித்தார். இதனிடையே ஹரியானாவில் இன்று கூடும் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராடுவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

The post பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசுத் தலைவரை சந்திக்க விவசாய சங்கங்கள் திட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: