மீனாட்சியம்மன் கோயிலின் புதுமண்டபம் சீரமைப்பு பணிகள் விரைவில் துவக்கம்: ஐகோர்ட் கிளையில் தகவல்

 

மதுரை, ஜூன் 2: மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் ரூ.2.24 கோடியில் விரைவில் துவக்கப்படவுள்ளதாக ஐகோர்ட் கிளையில் கூறப்பட்டுள்ளது. மதுரை, புதுமாகாளிபட்டி ரோட்டைச் சேர்ந்த மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்குப் பகுதியில் புதுமண்டபம் அமைந்துள்ளது. இங்கு கலை நயமிக்க சிற்பங்களும், 124 தூண்களும் உள்ளன. மண்டபத்தின் மையப்பகுதியில் நாயக்கர்கள் காலத்து 14 மன்னர்களின் ஓவியங்கள் உள்ளன. இந்த மண்டபம் மிகச்சிறந்த கட்டிடக்கலையின் அடையாளமாக உள்ளது. புதுமண்டபத்தை பாரம்பரிய பகுதியாக அறிவித்து அங்கிருந்த 300 கடைகள் அகற்றப்பட்டன. தற்போது போதிய பராமரிப்பின்றி புதுமண்டபம் பூட்டிக் கிடக்கிறது.

எனவே, புதுமண்டபத்தை புனரமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார், சிறப்பு பிளீடர் சுப்பாராஜ் ஆகியோர் ஆஜராகி, ரூ.2.24 கோடி மதிப்பில் புதுமண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உயர்நிலைக்குழு அனுமதித்துள்ளது. இதற்கான திட்ட அனுமதி கோரிய மனு அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ளது. அனுமதித்து நிதி கிடைத்ததும், விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டது. இந்த தகவலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.

The post மீனாட்சியம்மன் கோயிலின் புதுமண்டபம் சீரமைப்பு பணிகள் விரைவில் துவக்கம்: ஐகோர்ட் கிளையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: