இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாற்றி அமைக்கும் விதமாக ஒன்றிய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதனை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டமாக மாற்றுவதற்கும் ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வரக்கூடிய சூழலில், இந்த சட்ட திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவையில் இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனக்கூறி, பாஜவுக்கு எதிராக இருக்கும் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகிறார். இந்த மசோதாவை எதிர்க்கும்படி இதுவரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனி விமானம் மூலம் நேற்று மாலை 3.50 மணிக்கு சென்னை வந்தார். அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வந்திருந்தார். பின்னர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேற்று மாலை 5 மணிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் வந்தனர். அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை மற்றும் நினைவுபரிசு வழங்கினார். கெஜ்ரிவால், பகவந்த் மான் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். இந்த சந்திப்பின்போது எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம் நடைபெற்றது.
மூன்று மாநில முதல்வர்கள் சந்திப்புக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் என்னை சந்தித்துள்ளனர். கெஜ்ரிவாலை பொறுத்தவரையில் டெல்லி செல்லும்போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை நான் பெறுவதுண்டு. தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்குள் நுழையும்போது அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து ‘புதுமைப்பெண்’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன்மூலமாக மாதம் ரூ.1000 அவர்களுக்கு வழங்கக்கூடிய திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இந்த திட்டத்தை டெல்லி மாநில முதலமைச்சர் நேரடியாக வந்து அதை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் வருகை தந்து சிறப்பித்தார்.
டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலை பொறுத்தவரை நல்ல நண்பராக என்னோடு பழகிக் கொண்டிருக்கக் கூடியவர். நானும் அவருடன் பழகிக் கொண்டிருக்கிறேன். டெல்லி முதலமைச்சருக்கு, அதேபோல் அவர் சார்ந்திருக்கக்கூடிய ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து பாஜ ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஆட்சியை சுதந்திரமாக செயல்பட விடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் டெல்லி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மூலமாக பல்வேறு தொல்லைகள் எல்லாம் தொடர்ந்து வழங்கப்பட்டு இருக்கிறது.
பணியாளர் தொடர்பான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றம் ஒரு அழகான தீர்ப்பை டெல்லி மாநிலத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனால் அது நிறைவேறக்கூடாது என்ற ஒரு எண்ணத்தோடு பாஜ ஆட்சி அதை எதிர்த்து இன்றைக்கு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து இருக்கிறது. இந்த அவசர சட்டத்தை நிச்சயமாக திமுக கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே, இதுகுறித்து இரு மாநில முதலமைச்சர்களும் எங்களோடு கலந்து பேசி, மற்ற மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர்களும், பல்வேறு கட்சியினுடைய தலைவர்களும் என்னென்ன நிலையில் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் எப்படி ஆதரிக்க வேண்டும் என்ற சூழ்நிலைகள் குறித்து நாங்கள் கலந்து பேசினோம். அந்த வகையில் இந்த கூட்டம் நடந்திருக்கிறது. நிச்சயமாக எல்லா மாநிலத்தினுடைய முதலமைச்சர்களும், அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய கட்சி தலைவர்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று நான் அவர்களையெல்லாம் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மிக ஆரோக்கியமாக, நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த கூட்டம் நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜனநாயகத்தை காக்க ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக வருகிற 12ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறுவதாக அறிவித்து இருக்கிறார். அதேநேரம், ராகுல் காந்தி அதில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது.என்னை பொறுத்தவரை நானும் கலந்துகொள்ள முடியாத நிலை. காரணம், ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை நேரில் திறந்து வைக்கும் நிகழ்ச்சி இருக்கிறது. ஆகவே, தேதியை மாற்றி வையுங்கள் என்று நானும் சொல்லி இருக்கிறேன், கார்கேவும் சொல்லி இருக்கிறார். இப்போது முதல்வர் கெஜ்ரிவாலிடமும் அதுபற்றி சொல்லி இருக்கிறோம். ஜனநாயகத்தை காப்பதற்கு இப்படிபட்ட ஒருங்கிணைப்பு அவசியம். நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், ஆசை என்றார்.
The post டெல்லி மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்ட விவகாரம்; முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு: ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.