தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கை இணையதளம் மூலம் முடக்கி ரூ.17.30 லட்சம் திருடிய நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் கைது: லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டு பறிமுதல்

சென்னை: தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கை இணையதளம் மூலம் முடக்கி ரூ.17.30 லட்சத்தை திருடிய நைஜீரியாவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் பொது மேலாளர், சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில், தங்கள் நிறுவன வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் முடக்கப்பட்டு, வங்கி கணக்கில் இருந்த ரூ.17.30 லட்சம் திருடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், தனியார் நிறுவன வங்கி தகவல்கள் சைபர் குற்றவாளிகளால் இ-மெயில் மூலம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் வங்கி கணக்கோடு தொடர்புடைய செல்போன் எண்ணை முடக்கம் (பிளாக்) செய்து, அதே மொபைல் எண்ணில் புது சிம் கார்டை பெற்றுள்ளதும், வங்கி பரிவர்த்தனையின் போது பெறப்படும் ஓடிபிகளை புது சிம் கார்டு நம்பரில் பெற்று பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மேலும் குற்றவாளியின் பல்வேறு வங்கி கணக்குகளையும் செல்போன் எண்களையும் ஆராய்ந்தும், ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டும், இவ்வழக்கோடு தொடர்புடைய குற்றவாளிகள் பெங்களூருவில் இருந்து செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

அதன்பேரில், சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பெங்களூருவில் விசாரணை செய்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவைச் சேர்ந்த யூசுப்ஒலாலேகான் (30), ஒபியேலு பீட்டர் (41), ஒல்யூபூபே ஜேம்ஸ் (25) ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இவ்வழக்கில் தொடர்புடைய 2 லேப்டாப்கள், 9 மொபைல் போன்கள், 14 சிம் கார்டுகள், 12 டெபிட் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. குற்றவாளிகள் மூன்று பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கை இணையதளம் மூலம் முடக்கி ரூ.17.30 லட்சம் திருடிய நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் கைது: லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டு பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: