இன்று முதல் ஜப்பானில் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி

ககாமிகஹாரா: ஓமனில் ஆடவருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி நேற்றுடன் முடிந்தது. அதனையடுத்து மகளிருக்கான 8வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று ஜப்பானில் தொடங்குகிறது. தரவரிசையில் ஏப்.4ம் தேதி வரை ஆசிய அளவில் முதல் 10 இடங்களை பிடித்திருந்த அணிகள் இந்தப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. அதன்படி இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள், 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்தப் போட்டியில் களம் காண உள்ளன. இந்தியா உள்ள ஏ பிரிவில் முன்னாள் சாம்பியன் கொரியா, மலேசியா, தைவான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய அணிகள் இருக்கின்றன. பி பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, ஜப்பான், கஜகஸ்தான், ஹாங்காங், இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள மலேசியோ-தைவான் அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நாளை காலை 10.30 மணிக்கு உஸ்பெஸ்கிஸ்தானை எதிர்கொள்கிறது. தொடர்ந்து இந்தியா ஜூன் 5ம் தேதி மலேசியாவையும், ஜூன் 6ம் தேதி கொரியாவையும், ஜூன் 8ம் தேதி தைவானையும் எதிர்த்து களம் காண உள்ளது. ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் லீக் ஆட்டங்கள் ஜூன் 8ம் தேதியுடன் முடிகின்றன. தொடர்ந்து 10ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 11ம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறும்.

* கொரியா, சீனா ஆதிக்கம்
இதுவரை நடந்த 7 போட்டிகளில் கொரியா 4 முறையும், சீனா 3முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன. அதிலும் தொடர்ந்து 2முறை வென்று கோப்பையை வைத்துள்ள சீனா ஹாட்ரிக் வெற்றி கனவில் களம் காண இருக்கிறது.

* இதுவரை இந்தியா…
இந்திய இளையோர் மகளிர் அணி இதுவரை நடந்த 7 கோப்பைகளிலும் விளையாடி உள்ளது. அவற்றில் 6முறை அரையிறுதிக்கு முன்னேறியது. அதில் ஒருமுறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி 2வது இடத்தை பிடித்தது. அதுதவிர 4முறை 3வது இடத்தையும், ஒருமுறை 4வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. இந்திய அணி பிரீத்தி(கேப்டன்), தீபிகா(து.கேப்டன்), மாதுரி, அதிதீ(கோல் கீப்பர்கள்), மகிமா, நீலம், ரூப்னி, அஞ்சலி, ருதுஜா, மஞ்சு, ஜோதி, வைஷ்ணவி, சுஜாதா, மானஸ்ரீ, மும்தாஜ், தீபிகா சொரெங், அன்னு, சுனிலிதா.

The post இன்று முதல் ஜப்பானில் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி appeared first on Dinakaran.

Related Stories: