மாநில அதிகாரத்திற்கு எதிராக பாஜக செயல்படுகிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!

சென்னை: மாநில அதிகாரத்திற்கு எதிராக பாஜக செயல்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார். 3 மாநில முதலமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.

திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் உள்ளனர். இந்த சந்திப்பின்போது, ஒன்றிய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தின் பாதகம் குறித்தும், ஒன்றிய அரசு ஒருதலைபட்சமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சந்திப்புக்கு பின் 3 மாநில முதலமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

டெல்லி, பஞ்சாப் முதலமைச்சர்களுடனான சந்திப்புக்கு பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: நான் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் அடிக்கடி கெஜ்ரிவாலை சந்திப்பேன். புதுமைப்பெண் திட்டம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. 12-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க முடியாத சூழல். பாட்னாவில் நடக்க உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தேதி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

ராகுல் காந்தியும் வெளிநாட்டில் இருப்பதால் 12-ம் தேதி கூட்டத்தில் அவரும் பங்கேற்பதில் சந்தேகம் தான். மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளதால் எதிர்க்கட்சி ஆலோசனை கூட்ட தேதியை மாற்றக்கோரியுள்ளேன். டெல்லி துணைநிலை ஆளுநர் மூலம் ஆளும் அரசுக்கு தொடர்ந்து தொல்லைகள் தரப்பட்டு வருகின்றது. அகில இந்திய அளவில் இருக்கும் கட்சிகளும் டெல்லி அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தேர்தலுக்காக மட்டுமல்ல ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது அவசியமாக உள்ளது. ஜனநாயகத்தை காக்க இதுபோன்ற சந்திப்புகளும் ஆலோசனைகளும் அவசியம். டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் ஒன்றிய பாஜக அரசு தடுத்து வருகிறது. டெல்லி அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை திமுக எதிர்க்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

The post மாநில அதிகாரத்திற்கு எதிராக பாஜக செயல்படுகிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: