ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்க என்ன காரணம்?

அதி தீவிர ராம பக்தரான அனுமன், ராம நாமம் சொன்னாலோ, எழுதினாலோ மனம் குளிர்ந்து அருளக் கூடியவர். தனது பக்தர்களை காப்பதற்காக ஓடோடி வரக் கூடியவர். இவருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது, செந்தூரம் அணிவிப்பது, துளசி அணிவிப்பது, வடை மாலை சாற்றுவது ஆகியன முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளது.

அதை விட மேலான வழிபாடு வெற்றிமலை அணிவிப்பதும், ஸ்ரீராம ஜெயம் எழுதி அதை மாலையாக கட்டிப் போடுவது ஆகியன அனுமனின் அனுகிரகத்தை பெற்றுத் தரும். காரிய சித்தியை அருளும் அனுமனுக்கு வெற்றிலையால் மாலை கட்டி போட்டால், எடுத்த காரியங்கள் அனைத்திலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.  தடைகள் அனைத்தும் அகலும். குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் குடியேறும் என்பது ஐதீகம்.

வெற்றிலை மாலை :

“ஸ்ரீராம ஜெய ராமா, ஜெய ஜெய ராமா” என்ற நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் பிரசன்னமாகி விடுவார். தினமும் இந்த நாமத்தை 21 முறை உச்சரித்தால் அனுமனின் அருளாசி பரிபூரணமாகக் கிடைக்கும். தடைகள் நீங்குவதற்கு, காரிய வெற்றி பெற்றுவதற்கு, பயம் போவதற்கு, சனி உள்ளிட்ட நவகிரகங்களின் தோஷம் விலகுவதற்கு அனுமனை வழிபடுவார்கள். இதற்காக அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் வழக்கம் உள்ளது. அனுமனுக்கு வெற்றிமலை அணிவிக்கும் வழக்கம் வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது.

அனுமனுக்கு வெற்றிலை மாலை :

ராமாயணத்தில் ராவணனோடு நடந்த போர் நிறைவடைந்து, ராமர் வெற்றி பெற்று விட்டார். இந்த தகவலை அசோகவனத்தில் ராமரின் வருகைக்காக காத்திருக்கும் சீதா தேவியிடம் விரைந்து சென்று தெரிவித்தார் அனுமன். இந்த செய்தியால் மனமகிழ்ச்சி அடைந்த சீதா தேவி, ஆஞ்சநேயருக்கு ஏதாவது பரிசு தர விரும்பினாள். உடனடியாக தனக்கு அருகில் படந்து சென்ற வெற்றிலைக் கொடியை எடுத்து, மாலையாக்கி அனுமனின் கழுத்தில் அணிவித்தாள் சீதை. மகாலட்சுமியின் அம்சமான சீதா தேவியின் கைகளால் அணிவிக்கப்பட்ட மாலையால் மனம் மகிழ்ந்தார் அனுமன்.

இதனால் சீதா தேவியை போன்று நாமும் வெற்றிலை மாலை அணிவித்தால், அதனால் மனம் மகிழ்ந்து நமக்கு அனுமன் வெற்றியை தருவார் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே வெற்றிலை மாலை சாற்றும் வழக்கம் வந்தது. பொதுவாகவே வெற்றிலை என்பது வெற்றியை தரக் கூடிய இலை ஆகும். அதன் காரணமாகவே அனைத்து விசேஷங்களிலும் வெற்றிலை முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

எத்தனை வெற்றிலையில் மாலை கட்ட வேண்டும் ?​

இதே போல் அனுமனுக்கு சாத்தும் மாலையில் எத்தனை வெற்றிலைகள் வைக்க வேண்டும், அதில் பாக்கு வைத்து கட்ட வேண்டுமா, வெற்றிலையை சுழற்றி தான் கட்ட வேண்டுமா? விரித்த நிலையில் கட்டக் கூடாதா என பல சந்தேகங்கள் பக்தர்களுக்கு உண்டு. சாதாரணமாக எத்தனை வெற்றிலை வைத்து வேண்டுமானாலும் வெற்றிலை மாலை கட்டலாம். அனுமன் விக்ரஹம் அமைந்துள்ள உயரத்தை பொருத்து, எண்ணிக்கை வைக்கலாம். சிறியதாக இருந்தால் 16, 36, 51 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். பெரிய சிலையாக இருந்தால் 108, 1008 என்ற கணக்கில் வைத்து கட்டலாம்.

வெற்றிலையுடன் பாக்கு வைத்தும் மாலை கட்டலாம். பாக்கு இல்லாமல் வெறும் வெற்றிலையை வைத்தும் மாலை கட்டலாம். பாக்குடன் சேர்த்து வெற்றிலை வைப்பது தாம்பூலத்திற்கு சமமானது. இதனால் சிறப்பான மங்கலம் தரக் கூடியது என்பதால் வெற்றிலையுடன் பாக்கு வைத்து, மாலையாக கட்டுவது நல்லது.

பலன்கள் :

குடும்பத்தில் கணவன் – மனைவி பிரச்சனை, தொழிலில் தடை, வாழ்க்கையில் பயம், வியாபாரத்தில் உடன் இருப்பவர்கள் ஏமாற்றி விடுவார்களோ என்ற நிலை, தேர்வில் வெற்றி பெற வேண்டும், மனக்குழப்பம், எடுத்த காரியங்கள் வெற்றி அடைய வேண்டும், வீணான பயம் உள்ளவர்கள் அனுமனுக்கு சனிக்கிழமை, அமாவாசை, மூலம் நட்சத்திரம் வரும் நாட்களில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபடலாம்.

The post ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்க என்ன காரணம்? appeared first on Dinakaran.

Related Stories: