முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி; விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருப்பதால் ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர், ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு முதல் போகத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவிட்டார்.

தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி இன்று முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் 14,707 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

The post முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி; விவசாயிகள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: