கருணாநிதி சிலை வைக்க நகராட்சி அனுமதி

நாமக்கல், ஜூன் 1: நாமக்கல் செலம்பகவுண்டர் பூங்கா அருகில் கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்ப, நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநியின் நூற்றாண்டு விழா, வரும் 3ம் தேதி முதல் ஓராண்டு காலம் திமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் சிலை நாமக்கல் நகரில் அமைக்கப்படுகிறது.

இதற்காக சிலை அமைப்பு குழுவை, மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., அமைத்துள்ளார். நாமக்கல்-பரமத்தி ரோட்டில் உள்ள செலம்பகவுண்டர் பூங்கா அருகில், கலைஞரின் சிலையை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தில் முறைப்படி அமைப்பு குழு அனுமதி கேட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று நாமக்கல் நகர்மன்ற கூட்டம், அதன் தலைவர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி துணைத்தலைவர் பூபதி, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், நாமக்கல் நகரில் கலைஞரின் சிலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அனுமதி அளித்து நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதன் விபரம் வருமாறு: நாமக்கல் செலம்பகவுண்டர் பூங்காவின் தென்மேற்கு மூலையில், 10 அடி உயர பீடத்தில் 8 அடி உயரம், 52 அகலம் கொண்ட வெண்கலத்தாலான கலைஞரின் உருவச்சிலையை, சொந்த செலவில் அமைத்து கொள்ள 17 அடி நீளம், 17 அடி அகலம் கொண்ட இடத்தை ஒதுக்கி தரும்படி, சிலை அமைப்பு குழு கேட்டுள்ளது. இந்த இடத்தில், கலைஞரின் சிலை அமைக்க, அரசின் அனுமதி பெற, கலெக்டரின் பரிந்துரையை பெற்று, நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கருத்துரு சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்: நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள மழை நீர் வடிகால்களில் அதிக அளவில் தூர் படிந்துள்ளதால், மழைகாலங்களில் மழைநீர் சாலையில் வெளியேறி, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கனரக இயந்திர வாகனங்களை கொண்டு, பெரிய மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படும். 34வது வார்டு முல்லைநகரில் சிறுபாலம் பராமரித்தல், நாமக்கல் நகராட்சி 13, 14, 15, 26 மற்றும் 34 வது வார்டுகளில் ₹62 லட்சத்தில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நாமக்கல்-துறையூர் ரோடு நகராட்சி திருமண மண்டபத்தில் உள்ள பழுதடைந்த தண்ணீர் தொட்டி, மின்விளக்குகளை ₹15 லட்சத்தில் சரி செய்ய கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் சுகுமார், சுகாதார ஆய்வாளர் பழனிசாமி, கட்டட ஆய்வாளர் சீனிவாசன், மேலாளர் கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கருணாநிதி சிலை வைக்க நகராட்சி அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: