அண்ணா பல்கலையின் அனைத்து கல்லூரிகளிலும் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும்: தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவுரை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்ய அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இன்ஜினியரிங் இளங்கலை படிப்புகளில் முதல் செமஸ்டரில் தமிழர் மரபு மற்றும் 2ம் செமஸ்டரில் தமிழரும், தொழில்நுட்பமும் ஆகிய பாடங்கள் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல், அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள்(தன்னாட்சி கல்லூரிகள் உள்பட), அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், கல்லூரியில் தகுதியுடைய தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் இருந்தால் உடனடியாக அவர்களை நியமிக்க வேண்டியது இன்றியமையாத கடமை ஆகும். அத்தகைய ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.பில், ஆகியவற்றுடன் தேசிய தகுதித்தேர்வு, மாநில அளவில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தால், அதுதொடர்பான விவரங்களையும், இனிமேல் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின் விவரங்களையும் வருகிற 12ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணா பல்கலையின் அனைத்து கல்லூரிகளிலும் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும்: தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: