என்னால் தூங்க முடியவில்லை; ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன்: குஜராத் அணி பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா வேதனை

மும்பை: ஐபிஎல் இறுதிப்போட்டியில் பந்துவீசியது குறித்து மோஹித் ஷர்மா வேதனை தெரிவித்துள்ளார். கடைசி பந்தில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்துவிட்டது, என்னால் தூணாக முடியவில்லை என குஜராத் அணி பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணி அபாரம் வென்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்தப்போட்டியில் இறுதி ஓவரை சிறப்பாக வீசி வந்த மோஹித் ஷர்மா, கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை யார்க்கர் வீச முயற்சி செய்து ஃபுல்டாஸாக சென்றதால் சென்னை அணி வீரர் ஜடேஜா அதை எளிமையாக பவுண்டரிக்கு தட்டிவிட்டு சென்னை அணியை வெற்றி பெற செய்தார்.

இது குறித்து குஜராத் அணி பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா தெரிவித்துள்ளதாவது; நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச வேண்டும் நினைத்தேன். எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன். என்னுடைய செயல் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பாண்ட்யா அறிந்து கொள்ள விரும்பினார். மீண்டும் யார்க்கர் வீச முயற்சிப்பேன் என்று கூறினேன்.

கடைசி பந்தில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன். என்னால் தூங்க முடியவில்லை.

நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசியிருந்தால் என்னவாகியிருக்கும்? போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எங்கோ ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன்” என மோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

The post என்னால் தூங்க முடியவில்லை; ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன்: குஜராத் அணி பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா வேதனை appeared first on Dinakaran.

Related Stories: