பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீரர் மெட்வெடேவ் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ்: ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 3வது நாளான நேற்றும் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று நடந்தன. ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2வது இடம் வகிக்கும் ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய 172ம் நிலை வீரர் தியாகோ செய்போத் வைல்டுவை (பிரேசில்) எதிர்கொண்டார். 4 மணி 15 நிமிடங்கள் இந்த போட்டி நீடித்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் செய்போத் வைல்டு 7-6 (7-5), 6-7 (6-8), 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மெட்ெவடேவுக்கு அதிர்ச்சியளித்தார்.

கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக கணிக்கப்பட்டிருந்த மெட்வெடேவ், பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்றுடன் வெளியேறுவது 5வது முறையாகும். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (8-6), 7-6 (7-0), 6-1 என்ற நேர் செட்டில் தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிசை தோற்கடித்தார். கேஸ்பர் ரூட் (நார்வே), நிஷியோகா (ஜப்பான்), ஆன்ட்ரியா வவாசோரி (இத்தாலி) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4வது இடம் வகிப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் பிரன்டா புர்விர்தோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் 7ம் நிலை வீராங்கனையான ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), தன்னை எதிர்த்த லுசியா பிரோன்செட்டியை (இத்தாலி) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். அமெரிக்க இளம் புயல் கோகோ காப் 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ரெபகா மசரோவாவை (ஸ்பெயின்) போராடி வென்றார். அதே சமயம் 2021-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 2-6, 4-6 என்ற நேர் செட்டில் லெசியா சுரென்கோவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார். நேற்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடிய சுரென்கோவுக்கு, பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி அமைந்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

The post பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீரர் மெட்வெடேவ் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: