இலவச சைக்கிள்கள் தயாரித்ததில் பல கோடி வரி ஏய்ப்பு அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது; கான்டிராக்டரிடம் விசாரணை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள் தயாரித்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறி, அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது, அதை வைத்து ஒப்பந்ததாரரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் யூனைடெட் இந்தியா காலனி 5வது தெருவை சேர்ந்தவர் சுந்தரபரிபூரணம். தொழிலதிபரான இவர், பஞ்சாப் மாநிலம் லுதியானவில் ‘ஏஓன்’ என்ற பெயரில் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். பிரபல சைக்கிள் நிறுவனங்கள் போல் பஞ்சாப் மாநிலத்தில் இந்த சைக்கிள் மிகவும் பிரபலம்.

இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தொழிலதிபர் சுந்தரபரிபூரணம் எடுத்தார். அப்போது ‘ஏஓன்’ சைக்கிள் ஒன்றின் விலை ரூ.3,159க்கு விற்பனையானது. ஆனால் அதிமுக அரசு ஒரு சைக்கிள் விலை ரூ.4,800க்கு என்று டெண்டர் விட்டதாக கூறப்படுகிறது. அதன் மூலம் ஏஓன் சைக்கிள் நிறுவனம் பல லட்சம் சைக்கிள் கொள்முதல் செய்து தமிழக அரசுக்கு வழங்கியது. அதன் மூலம் பல கோடி ரூபாய் ஏஓன் நிறுவனம் லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

எனவே, கடந்த 2021-22 காலக்கட்டத்தில் ஏஓன் சைக்கிள் நிறுவனம் வருமான வரித்துறையில் தாக்கல் செய்த ஆவணங்களில் பல கோடி ரூபாய் வருமானத்தை அதாவது தங்கள் நிறுவனம் விற்பனை செய்யும் விலைக்கே சைக்கிள் கொடுத்ததாக கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது. அதேநேரம், ‘ஏஓன்’ சைக்கிள் நிறுவனம் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் மொத்தமாக தயாரித்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-23ம் நிதியாண்டில் 11 லட்சம் இலவச சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ‘ஏஓன்’ நிறுவனம் தான் மொத்தமாக எடுத்துள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொள்முதல் செய்த சைக்கிளில் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரிஏய்ப்பு செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து ‘ஏஓன்’ சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரபரிபூரணத்திற்கு சொந்தமான கோடம்பாக்கத்தில் உள்ள வீடு, அலுவலகங்கள், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சைக்கிள் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், இலவச சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த பத்திரங்கள் என முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, தொழிலதிபர் சுந்தரபரிபூரணம் மற்றும் ஏஓன் சைக்கிள் நிறுவன அதிகாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இலவச சைக்கிள்கள் தயாரித்ததில் பல கோடி வரி ஏய்ப்பு அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது; கான்டிராக்டரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: