புனரமைக்கும் பணிக்காக தண்ணீரை வெளியேற்றியதால் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பெரிய ஏரியிலிருந்து புனரமைக்கும் பணிக்காக தண்ணீர் வெளியேற்றியதால் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், அடையாறு துணை வடிநில படுகையில் உள்ள கூடுவாஞ்சேரி பெரிய ஏரியின் கொள்ளளவினை உயர்த்தி புனரமைக்கும் பணிக்காக ரூ.6 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி, ஏரிக்கரையை பலப்படுத்தி அதில் நடைபாதை அமைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மேற்படி சீரமைக்கும் பணிகளை, செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் கடந்த மாதம் 3ம் தேதி திடீரென வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார். இந்நிலையில், கூடுவாஞ்சேரி பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றியதால் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கிடக்கிறது. இதனால், துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி 30 வாரங்கள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இதில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான கூடுவாஞ்சேரி பெரிய ஏரியில் பொத்தேரியில் உள்ள பிரபல புகழ் வாய்ந்த கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வல்லாஞ்சேரி வழியாக வந்து மேற்படி ஏரியில் கலக்கிறது. இந்நிலையில், இந்த ஏரியில் புனரமைப்பு பணிக்காக கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், ஏரியிலிருந்த தண்ணீரின் அளவு குறைந்ததால், கோடை வெயில் காரணமாக தண்ணீர் வெப்பமானதால் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

இதில், ஏரியில் மீன்கள் இருப்பது தெரிந்தும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் ஏரியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி லட்சக்கணக்கான மீன்களை இறையாக்கிவிட்டனர். இதில், தண்ணீரை வெளியேற்றுவதற்கு முன்பு ஏலம் விடப்பட்டு மீன்களை விற்பனை செய்திருக்கலாம். ஆனால், அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் மேற்படி ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து வீணாகி மிதக்கிறது.

இதனால் ஆதனூர், டிடிசி நகர், பலராமபுரம், லட்சுமிபுரம், மாடம்பாக்கம், குத்தனூர், தைலாவரம், வள்ளலார் நகர், ஒரத்தூர், நீலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுவாஞ்சேரி மேம்பாலம் வழியாக சென்று வரும் அனைத்து தரப்பு பொதுமக்களும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post புனரமைக்கும் பணிக்காக தண்ணீரை வெளியேற்றியதால் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: