சில விளையாட்டு வீரர்களுக்காவது உரிய மரியாதையும், அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி: மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் ட்வீட்..!!

டெல்லி: குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி மற்றும் தோனிக்கு மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி மற்றும் தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார். சில விளையாட்டு வீரர்களுக்காவது உரிய மரியாதையும் , அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி என்றும் எங்களை பொறுத்தவரை நீதிக்கான போராட்டம் தொடர்கிறது எனவும் மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் ட்வீட் செய்துள்ளார்.

லக்னோ தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீராங்கனைகள் அங்குள்ள பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் 10க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றம்சாட்டி உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்க்ஷி மாலிக் உட்பட சுமார் 30 வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாக்க்ஷி மாலிக்கின் ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

The post சில விளையாட்டு வீரர்களுக்காவது உரிய மரியாதையும், அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி: மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் ட்வீட்..!! appeared first on Dinakaran.

Related Stories: