ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நடுவர்கள் அறிவித்த நிலையில், 15வது ஓவரில் இலக்கை எட்டியது.5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் இருக்கும் தோனி என்ற மனிதனின் கீழ் ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது பதிவில் கூறியுள்ளார்.

The post ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: