சேவகப்பெருமாள் அய்யனார் கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்: சிங்கம்புணரியில் கோலாகலம்

 

சிங்கம்புணரி மே 30: சிங்கம்புணரியில் உள்ள சேவகப்பெருமாள் அய்யனார் கோயிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின. சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவகப் பெருமாள் அய்யனார் உடனான பூரணை புஷ்கலை தேவியர், கோயில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோயில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு குலதெய்வ கோயிலாகவும், சிங்கம்புணரியின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேக விழா, வரும் ஜூன் ஒன்றாம் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.

ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் நடைபெறவுள்ள இக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைக்கான கணபதி ஹோமம், பூஜைகள் தொடங்கின. நிகழ்ச்சிக்கு திருப்பணிக் குழு தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராம அருணகிரி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, கோயில் கண்காணிப்பாளர் தன்னாயிரம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

இதில் கிராம முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சேவகப் பெருமாள் உடனான பூரணை புஷ்கலை தேவியாருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. வண்ணமலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தினமும் அன்னதான நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

The post சேவகப்பெருமாள் அய்யனார் கோயிலில் யாகசாலை பூஜை தொடக்கம்: சிங்கம்புணரியில் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: