மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்த ஆய்வுக் கூட்டம்

மதுரை, மே 30: மதுரை மாவட்ட அளவில், பிளஸ் 2 பொதுத்தேர்வின், தேர்ச்சி சதவீதம் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப். 4ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. இதில், மதுரை மாவட்ட அளவில், கடந்தாண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி குறைந்தது. இதன்படி கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 4வது இடம் வகித்த மதுரை மாவட்டம், 15வது இடத்திற்கு சென்றது. இந்த தேர்ச்சி குறைவு குறித்து ஆய்வு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களிடமும் தேர்ச்சி சதவீதம் குறித்து விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி மதுரை மாவட்ட அளவிலான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்து அரசு (அரசு பள்ளிகள், ஆதிதிராவிடர், மாநகராட்சி, கள்ளர்) பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 186 பேர் கலந்து கொண்டனர். காலையில் அரசு பள்ளிகளுக்கும் மாலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு தலைமை வகித்தமுதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, அனைத்து தலைமையாசிரியர்களிடமும் பிளஸ் 2 தேர்வு குறித்த அறிக்கையை பெற்று ஆய்வு நடத்தினார்.

பள்ளி தேர்ச்சி விகிதம், பாட வாரியாக மாணவர்கள் தேர்ச்சி, ஒரு பாடம், இரண்டு பாடங்களில் தோல்வி எண்ணிக்கை, பள்ளியின் `ஆவரேஜ்’ மதிப்பெண், எந்த பாடத்தில் அதிக தோல்வி, அந்தப்பாட ஆசிரியர்கள் குறித்து விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதனையடுத்து பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர் பாராட்டினார். தேர்ச்சி குறைந்த பள்ளிகள் வரும் கல்வியாண்டில் அதனை சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தி, ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கந்தசாமி, மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் முரளி, முத்துலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்த ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: