40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து மணிப்பூரில் 25 பேர் சிக்கினர்: ராணுவம் தீவிர வேட்டை

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்த நிலையில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ராணுவம், 40 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மேலும் 25 பேரை சுற்றிவளைத்து பிடித்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மை பிரிவினரான மெய்தீஸ் இனத்தவர்களுக்கு பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து, மலைவாழ் பழங்குடி மக்களான நாகா மற்றும் குக்கி இனத்தவர்கள் கடந்த 3ம் தேதி பேரணி நடத்தினர். இதில் ஏற்பட்ட வன்முறையில் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம், துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நடவடிக்கையில் இதுவரை 40 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் நேற்று முன்தினம் பரபரப்பு தகவலை வெளியிட்டார். அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்ய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவும் நேரில் சென்றுள்ளார். இந்நிலையில், குண்டு காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் நேற்று இறந்தனர்.

இம்பாலின் கிழக்கில் ராணுவம் நடத்திய சோதனையின் போது துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 22 மர்மநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல் இம்பால் சோதனைச்சாவடி ஒன்றில் காரில் ஆயுதங்களுடன் வந்த 3 பேரை துணை ராணுவம் சுற்றிவளைத்து பிடித்துள்ளது. சிக்கிய 25 பேரிடம் இன்சாஸ் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள், சீன கையெறி குண்டு, டெட்டனேட்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 25 பேரும் மணிப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து மணிப்பூரில் 25 பேர் சிக்கினர்: ராணுவம் தீவிர வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: