மைசூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு..!!

பெங்களூரு: மைசூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். திருமாகுடலு – நரசிபுரா சாலையில் நிகழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. மைசூரில் இருந்து கொன்னேகால் பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தும், கொன்னேகால் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த யுனோவா காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் யுனோவா காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து படுகாயங்களுடன் மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. பெல்லாரியில் இருந்து பெங்களூருவுக்கு இவர்கள் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர்.

பின்னர் பெங்களூருவில் இருந்து வாடகை கார் மூலமாக காம்ராஜ் நகர் மாவட்டத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுவிட்டு மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே காரில் எப்படி 13 பேர் செல்ல முடியும்? என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

The post மைசூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: